சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கண்ணூரில் பணிபுரிந்து வந்தார். அப்போது அவருக்கு கண்ணூர் முன்டயாடு பகுதியைச் சேர்ந்த அப்சீனா(வயது 29) என்பவர் அறிமுகம் ஆகி உள்ளார். இருவரும் தோழியாக பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில் தனக்கு தெரிந்த ஒருவர் மூலம் சினிமாவில் நடிக்க வைப்பதாக அந்த இளம்பெண்ணிடம் அப்சீனா கூறி இருக்கிறார். அதனை நம்பிய அந்த இளம்பெண் அப்சீனாவுடன் நெருங்கி பழகினார். அவர்களுடன் சந்திக்க வைப்பதாக கூறி சம்பவத்தன்று இளம்பெண்ணை ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து அந்த இளம்பெண்ணை சில வாலிபர்கள் கும்பலாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இது குறித்து யாரிடமும் கூறக்கூடாது என்று அப்சீனா உள்ளிட்டோர் மிரட்டி உள்ளனர். இருந்தபோதிலும் அந்த இளம்பெண், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து நடக்காவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் உதவி கமிஷனர் பிஜு ராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அந்த இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த மலப்புரத்தைச் சேர்ந்த அபுபக்கர், சமீர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி இளம்பெண்ணின் தோழியான அப்சீனாவும் கைது செய்யப்பட்டார். சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.