நடிகை விஜயலட்சுமி, சீமான் தன்னை ஏமாற்றியதாகவும், ஏழு முறை கருகலைப்பு செய்ததாகவும் புகார் அளித்திருந்த நிலையில், சீமானுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக கடந்த பல ஆண்டுகளாக நடிகை விஜயலட்சுமி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை விஜயலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்று தன்னை ஏமாற்றிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.
இந்த புகார் மனு மீது விசாரணை செய்ய கோயம்பேடு துணை ஆணையருக்கும் சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதனையடுத்து நடிகை விஜயலட்சுமி ராமாபுரம் காவல் நிலையத்தில் கோயம்பேடு துணை ஆணையர் உமையாள் முன்பு விசாரணைக்கு ஆஜரானார். நேற்று 8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. விசாரணையில் ஆடியோ ஆதாரங்கள், வங்கி பண பரிவர்த்தனை, ஹோட்டல் அறையில் தங்கிய ஆதாரங்களை விஜய லட்சுமி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இன்று நடிகை விஜயலட்சுமியை மேஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். ஆகையால், சீமான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், கோவை மாவட்டம் பல்லடம் அருகே போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த சீமானுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, உடனே அவர் பல்லடத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தேர்தல் பரப்புரையின் மயங்கி விழுந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, தற்போது சீமான் மனைவி, இரண்டு மகன்கள் என சந்தோஷமாக வாழ்ந்து வந்தநிலையில், நடிகை விஜயலட்சுமியின் புகார் அவரது குடும்பத்தையும், கட்சியினரிடையேயும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.