மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ரூ.39 கோடி செலவில் நினைவிடம் கட்டும் பணி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் நடைபெற்று வருகிறது. கருணாநிதி ஆற்றிய பணிகளை போற்றும் வகையில் அவரது சாதனைகள் எழுத்தாற்றல், சிந்தனைகள், அரசியல் ஆளுமையை விளக்கும் வகையில் நினைவிடத்தில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் முத்திரை பதித்ததன் அடையாளமாக, உதயசூரியன் போன்று கருணாநிதி நினைவிட முகப்பில் 3 வளைவுகள் அமைக்கப்பட உள்ளது.

அதுமட்டுமின்றி திறந்தவெளி காட்சி அரங்கம், அருங்காட்சியகம் ஆகியவையும் அமைய உள்ளது. கருணாநிதி நினைவிடத்தை அவரது நினைவு நாளான ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி திறக்க முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் வேலைகள் முடிவடையாததால் திறப்பு தள்ளி போனது. அதன் பிறகு இந்த மாதம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ந்தேதி திறக்கலாமா? என்றும் ஆலோசிக்கப்பட்டது. ஆனாலும் பல்வேறு பணிகள் முடிவடையாத காரணத்தால் அந்த தேதியும் தள்ளிப்போகிறது. செப்டம்பர் 15 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் சென்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இதனால் கருணாநிதியின் நினைவிடம் திறப்பு இன்னும் 2 மாதத்துக்கு தள்ளிப் போகும் என தெரிகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal