கர்நாடகாவில் கடந்த பாஜக ஆட்சியின்போது கொரோனா கால கட்டத்தில் கொரோனா மருந்துகள் வாங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி, இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி டி குன்ஹா தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து அம்மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. முதல்வராக சித்தராமையா பதவியேற்றார். கர்நாடகத்தின் தேர்தலின் போது அப்போது ஆட்சியில் இருந்த பாஜக அரசு 40 சதவீத கமிஷன் அரசாக செயல்படுவதாக காங்கிரஸ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது. குறிப்பாக கொரோனா கால கட்டத்தில் மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் உள்ளிட்டவை வாங்கியதில் சுகாதாரத்துறையில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பாக அப்போதே கூறிய காங்கிரஸ் தலைவர்கள் ஆட்சி மாற்றம் வந்த பிறகு கொரோனா காலத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறி வந்தனர். இந்த நிலையில் கடந்த பாஜக ஆட்சியில் கொரோனா கால கட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி டி குன்ஹா தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த ஆணையம், கொரோனா காலத்தில் மருந்து கொள்முதல் உள்ளிட்டவற்றில் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி, மூன்று மாதங்களுக்குள் அறிக்கை அளிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஓய்வுபெற்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தலைமையிலான ஆணையத்துக்கு தேவையான அனைத்து தகவல்களையும் வழங்குவதோடு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், ஆணையத்தில் இடம் பெற்றிருக்கும் அதிகாரிகளுக்கு ஊதியம் உள்ளிட்ட விவரங்களை வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. முந்தைய பாஜக அரசின் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, பழிவாங்கும் நடவடிக்கை என எச்சரித்துள்ளார். முறைகேடுகள் குறித்து விசாரிக்க நியமனம் செய்யப்பட்டு இருக்கும் டி குன்கா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்தவர் ஆவார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal