“எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கவே விரும்பினேன், ‘இண்டியா’ கூட்டணியில் பொறுப்பு வகிக்கும் எண்ணமில்லை” என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’கூட்டணியின் மூன்றாவது சந்திப்பு மும்பையில் ஆக.31-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தச் சந்திப்பு இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரிடம், ‘இண்டியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகும் வாய்ப்பு வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த நிதிஷ், “நான் எதுவாகவும் ஆக விரும்பவில்லை. நான் இதைத் திரும்பத் திரும்ப உங்களிடம் கூறி வருகிறேன். எனக்கு அப்படி எந்த ஆசையும் இல்லை. நான் அனைவரையும் ஒன்றிணைக்கவே விரும்பினேன்” என்று தெரிவித்தார்.
நிதிஷ் குமாரை முக்கிய உறுப்பினராக கொண்டிருக்கும் ‘இண்டியா’ கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில் 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைப்பது தொடர்பாகவும், குறிப்பிட்ட மாநிலங்களில் இடப்பகிர்வு குறித்த ஏற்பாடுகள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்படவுள்ளதாகவும் தெரிகிறது. 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக குறிப்பிட்ட பிரச்சினைகளை கையாளுவதற்கு ஐந்து பேர் கொண்ட குழு உருவாகுவதற்கான வியூகமும் இந்தக் கூட்டத்தில் வகுக்கப்படலாம். டிஜிட்டல் தளத்தில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக சமூக ஊடக உள்ளடக்கம் தயாரிப்பது குறித்தும், மும்பை கூட்டத்துக்கு பின்னர் வழங்கப்பட இருக்கும் கூட்டு அறிக்கை தயாரிப்பு குறித்த பேச்சுவார்த்தையும் நடந்து வருகின்றது.
இந்நிலையில், பிஹாரின் ஆளுங்கட்சி கூட்டணித் தலைவர் ஒருவர் கூறுகையில், “ஒற்றுமையை உருவாக்குவதில் நிதிஷ் எடுக்கும் முயற்சிகளுக்கு நிச்சயம் வெகுமதி கிடைக்கும் என்று அவர் எதிர்பார்க்கிறார். இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சியை முடிவெடுக்க செய்வதில், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பங்களிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்” என்றார்.
இதனிடையே ‘இண்டியா’கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு குறித்து நிதிஷ் குமார் கருத்து தெரிவிக்கையில், அவர் அருகில் இருந்த பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், “ஒருமனதாக முடிவெடுக்கப்படும், நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றுகிறோம்” என்றார்.
முன்னதாக, கடந்த வாரத்தில் பேசிய ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் ‘இண்டியா’ கூட்டணியில் மூன்று நான்கு மாநிலங்களை ஒருங்கிணைப்பதற்கும், தொகுதிப் பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தைக்கும் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் இருப்பார் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இண்டியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி பிஹார் தலைநகர் பாட்னாவில் நடந்தது. அங்கு பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் ஒரு முன்னணியினை உருவாக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் நடந்தது. அதில் கூட்டணிக்கு ‘இண்டியா’ என்று பெயர் முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.