அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்து தனி நீதிபதி குமரேஷ் பாபு கடந்த மார்ச் 28ம் தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து, ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி.பிரபாகர் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணை மொத்தம் 7 நாட்கள் நடைபெற்றது. இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஓபிஎஸ் உள்ளிட்டோர் 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதில், உச்சநீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்துள்ளதால், தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது. ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கிய, சிறப்பு தீர்மானத்துக்கும் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டதை அடுத்து அனைத்து மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பையொட்டி, ஓ.பி.எஸ்.ஸின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும், எடப்பாடி பழனிசாமி எங்கே எகிறி அடித்தார். ஓ.பன்னீர் செல்வம் எப்படி சறுக்கினார் என்பது பற்றி அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளிடம் பேசினோம்.
‘‘சார், தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் கூட ஒரு அரசியல் கட்சி உடையும் சூழல் ஏற்பட்டால் நீதிமன்றத்தை நாடி கட்சியை கைப்பற்ற முடியாது. எடப்பாடி பழனிசாமி இதனை நன்கு உணர்ந்து, மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் என ஒட்டுமொத்த கட்சியையும் கைப்பற்றினார்.
ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தனக்கருகே நான்கு பேரை வைத்துக்கொண்டு ஒவ்வொரு முறையும் நீதிமன்றப் படியேறினார். அதில் ஒரு சில வெற்றியும், தொடர் தோல்விகளையும் கண்டறிந்தார்.
முன்னதாக, எம்.ஜி.ஆர். அ.தி.மு.கவை தொடங்கி வழிநடத்திச் சென்றார். அவர் மறைவிற்குப் பிறகும் அ.தி.மு.க. நீதிமன்றப் படியேறியது. ஆனால், 90 சதவீத நிர்வாகிகளுடன் அ.தி.மு.க.வைக் கைப்பற்றினார் ஜெயலலிதா. அடுத்து ஜெ.வுக்கும், திருநாவுக்கரசருக்கு நடந்தது என்ன? வைகோவுக்கும், கலைஞர் கருணாநிதிக்கும் நடந்தது என்ன?
அதாவது, ஒரு கட்சி யார் கட்டுப்பாட்டில் இயங்கவேண்டும்… தலைமை யார்..? என்பதை நீதிமன்றம் முடிவு செய்யாது? திறமையுள்ளவர்கள்தான் தன் வசப்படுத்துவார்கள். அதன்படி எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து பொதுச் செயலாளராகிவிட்டார்.
ஓ.பன்னீர்செல்வம் நான்கு பேரை வைத்துக்கொண்டு இன்றும் ‘அசல் வழக்கு’ இருக்கு என்று நீதிமன்றத்தை நம்பிக்கொண்டிருக்கிறார். அதற்குள் எடப்பாடி பழனிசாமி முதல்வரானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இப்படித்தான் எடப்பாடி சாதித்ததும், ஓ.பன்னீர் சறுக்கிய பின்னணியும்’’ என்றனர்.