அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் மீண்டும் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப் பட்டிருக்கிறது. வருகிற 28ம் தேதி அவரிடம் அன்றைய தினம் குற்றப் பத்திரிகை நகல் வழங்கப்பட இருக்கிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். இதன்பின்னர் காவேரி ஆஸ்பத்திரியில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட செந்தில்பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்தும் விசாரித்தனர்.
பின்னர் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு 2 மாதங்களாகும் நிலையில் அவரது நீதிமன்ற காவல் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஜூன் 14-ந்தேதி கைது செய்யப்பட்டவுடன் அடுத்த 14 நாட்கள் அவரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி முதல் நீதிமன்ற காவல் ஜூன் மாதம் 28-ந்தேதி வரை என உத்தரவிடப்பட்டிருந்தது. 2-வது முறையாக ஜூலை 12 வரை காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டது.
இதன்பின்னர் ஜூலை 26-ந்தேதி வரையில் 3-வது முறையாக செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. அதன் பின்னர் ஆகஸ்ட் 11-ந்தேதி வரையில் நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவலை பின்னர் ஆகஸ்ட் 25-ந்தேதி வரை நீட்டிக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து அவரது நீதிமன்ற காவல் இன்று நீட்டிக்கப்பட்டது. செந்தில்பாலாஜி மீதான வழக்கு விசாரணை எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அங்கு காணொளி வாயிலாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.
வருகிற 28-ந்தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது அன்று புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி அன்று அழைத்துச் செல்லப்படுகிறார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்படும்போது 28-ந்தேதி குற்றப் பத்திரிகை நகல் வழங்கப்படுகிறது.