சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கு எதிராக உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். இது இன்று காலை விசாரணைக்கு வருகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து வேலூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், கடந்த ஆக.10-ம் தேதி தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து, பொன்முடி மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் பிறப்பித்தார்.

இதேபோல சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோருக்கு எதிராகவும் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தற்போது தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த 2 வழக்குகளும் இன்று விசாரணைக்கு வருகின்றன.

தமிழக வருவாய், பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி, அமைச்சரின் உதவியாளர் கேஎஸ்பி சண்முகமூர்த்தி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக கடந்த 2012-ல் அதிமுக ஆட்சிக் காலத்தில் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம், 3 பேரையும் விடுதலை செய்து கடந்த மாதம் 20-ம் தேதி தீர்ப்பு அளித்தது.

இதேபோல, நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர்தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகியோரை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த டிசம்பரில் தீர்ப்பு அளித்தது.

இந்நிலையில், இந்த வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 2 அமைச்சர்களுக்கும் எதிராக உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal