அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, கட்சியில் தனக்குள்ள செல்வாக்கு என்ன? என்பதை நிரூபிப்பதற்காக மதுரையில் நடத்திய மாநாட்டில் லட்சக்கணக்கானோர் திரண்டனர். அ.தி.மு.க. மாநாடு வெற்றி மாநாடாக அமைந்திருப்பதாக கூறி அறிக்கை வெளியிட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியில் அமரும் என்றும் அதில் தெரிவித்து உள்ளார். அ.தி.மு.க. மாநாடு வெற்றிகரமாக அமைந்ததில் மிகுந்த உற்சாகத்தோடு காணப்படும் எடப்பாடி பழனிசாமி கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்று ஆட்சி கட்டிலில் அமர வேண்டும் என்பதில் உறுதியுடன் உள்ளார். இதற்காக பிரிந்து சென்றிருக்கும் அ.தி.மு.க.வினரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அவர் மாவட்ட செயலாளர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மன்னிப்பு கேட்டு கடிதம் கொடுத்தால் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதை மையமாக வைத்து பிரிந்து சென்றிருப்பவர்களுடன் பேசி அவர்களை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ப்பதற்கான பணிகளை மாவட்ட செயலாளர்கள் முகம் கோணாமல் செய்ய வேண்டும் என்றும் எடப்பாடி உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எடப்பாடி பழனிசாமி நடத்திய மாநாடு வெற்றிகரமாக அமைந்திருப்பதை தொடர்ந்து ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி.தினகரன் ஆதரவாளார்கள் பலர் மீண்டும் அ.தி.மு.க.வில் சேருவதற்கு தூது விட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

சில மாவட்டங்களில் மாவட்டச் செயலாளரின் நடவடிக்கைகள் பிடிக்காமலேயே அ.தி.மு.க.வினர் எதிரணியில் இருந்து வருகிறார்கள். அதுபோன்று இருப்பவர்களை மாவட்டச் செயலாளர்கள் சந்தித்து பேசி ஒருங்கிணைத்து செயல்பட அழைப்பு விடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி மாவட்ட செயலாளர்கள் தங்களது பகுதிக்குட்பட்ட பழைய அ.தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து பேசி அவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் விரைவில் டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ். அணியில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அ.தி.மு.க.வில் சேர்ந்து விடுவார்கள் என்றும் மூத்த நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal