கடந்த 20ந்தேதி மதுரையில் நடந்த அ.தி.மு.க. கூட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்த நிலையில், எதிர்க்கட்சிகள் ‘புளி சாத’ அரசியல் செய்கின்றனர் என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா பத்திரிகையாளர்களிடம் விளக்கினார்.

மதுரையில் நடந்து முடிந்த அ.தி.மு.க. மாநாட்டைப் பற்றிக் கூட பத்திரிகை மற்றும் ஊடகங்களில் அதிகளவு செய்திகள் வரவில்லை. ஆனால், புளியோதரை சாதம் புளுத்துப் போய்விட்டது, சரியாக அரிசி வேகவில்லை என்பதைத்தான் விவாதப் பொருளாக்கினார்கள். எதிர் அணியான ஓ.பன்னீர் செல்வம் உள்பட தி.மு.க. ஆதரவு தொலைக்காட்சிகளும் இதனையே செய்தியாக வெளியிட்டது.

இந்த நிலையில்தான் மதுரை மாநாட்டில் உணவுப் பிரிவில் என்ன நடந்தது என்பதை தெளிவாக விளக்கினார் எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா, ‘‘மதுரை அ.தி.மு.க. மாநாட்டு லட்சக்கணக்கானோர் ஒருசேர குவிந்து மாநாடு இந்திய அளவில் ஒரு சரித்திர சாதனையை படைத்திருக்கிறது. கள்ளழகர், சித்திரைத் திருவிழாவையே மிஞ்சிவிட்டது அ.தி.மு.க. மாநாடு.

மாநாட்டிற்கு வரும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு உணவு வழங்குவதற்கு மூன்று கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டது. முதல் இரண்டு கவுண்டர்களிலும் சுடச் சுட சாம்பார் சாதத்தை வாங்கி தொண்டர்கள் சாப்பிட்டனர். மூன்றாவது கவுண்டர் அமைக்கப்பட்ட இடத்திற்கு குறைந்த அளவிலான நிர்வாகிகள் சென்றதால், மிஞ்சிய உணவைத்தான் கொட்டினார்கள். இந்தக் கவுண்டருக்கு நிர்வாகிகள் அதிகம் பேர் வராததால், உணவு மிஞ்சிவிட்டது.

ஒரே சமயத்தில் லட்சக்கணக்கானோர் குவிந்ததால், கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டது. இதனை திரித்து செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். லட்சக்கணக்கானோர் உணவருந்தும் போது, சின்ன சின்ன குறைகள் ஏற்படும். அதனை பெரிதாக்க வேண்டாம். வந்த தொண்டர்கள் அனைவரும் வயிறார சாப்பிட்டு விட்டுச் சென்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் வீட்டிற்கு வருபவர்கள் அனைவருக்கும் காபி கொடுத்து, உணவருந்திவிட்டுதான் செல்லவேண்டும் என்பார். அப்படிப்பட்டவர் தொண்டர்களுக்கு எந்தக் குறையும் வைக்கமாட்டார். அ.தி.மு.க. மாநாட்டில் குவிந்த தொண்டர்களைப் பற்றி பேசாமல், குறை சொல்ல எதிர்க்கட்சியினருக்கு புளிசாதம் கிடைத்துவிட்டது’’ என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal