மதுரையில் நடைபெற்ற அதிமுக எழுச்சி மாநாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘புரட்சித் தமிழர்’ என்ற புதிய பட்டம் வழங்கப்பட்டுள்ளது. சர்வ சமய பெரியோர்களால் இந்த ப்ட்டம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இனி அவரை அந்த பட்டத்தில்தான் அழைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால், தமிழ்நாட்டு அரசியலுக்கும், சினிமாவுக்கும் எப்படி நெருங்கிய தொடர்பு உள்ளதோ, அதேபோல் ‘புரட்சி’ என்ற பட்டமும் அரசியலிலும், சினிமாவிலும் நெருங்கிய தொடர்பு கொண்டது. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் முறையே புரட்சித் தலைவர், புரட்சித் தலைவர் என அழைக்கப்பட்டனர். பின்னாளில் அரசியலுக்கு வந்த விஜயகாந்த் புரட்சி கலைஞர் என்று அழைக்கப்பட்டார். நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த சரத்குமார் அவரது தொண்டர்களால் புரட்சி திலகம் என்று அழைக்கப்படுகிறார்.

இப்படி, தமிழ் சினிமாவுடனும், அரசியலுடனும் இரண்டர கலந்தது புரட்சி என்ற பட்டம். வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஹீரோவாக மாறி, பல்வேறு புரட்சிகர கருத்துகளை வெளிப்படுத்திய நாத்திகவாதி நடிகர் சத்தியராஜ் ‘புரட்சித் தமிழன்’ என்று அழைக்கப்படுகிறார். அவரது பட்டத்தைதான் தற்போது எடப்பாடி பழனிசாமி பறித்துக் கொண்டுள்ளார். இனி அவரை புரட்சித் தமிழர் என்று அழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

திமுகவினரால் அன்புடன் தளபதி என்றழைக்கப்பட்டவர் இன்று தலைவராகியுள்ள ஸ்டாலின். எப்படி இளைய தளபதி விஜய், தளபதியாகும் போது, திமுகவினருக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டதோ, அதேபோல், சத்தியராஜ் ரசிகர்களுக்கும், அதிமுகவினருக்கும் இடையே ஒரு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியுடனான மோதல் போக்கு காரணமாக 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி அதிமுகவை எம்ஜிஆர் தோற்றுவித்தார். எம்ஜிஆர் ஆரம்பித்த புதிய கட்சியின் அமைப்புச் செயலாளராக கே.ஏ.கிருஷ்ணசாமி பொறுப்பேற்றுக் கொண்டார். அவர்தான் எம்ஜிஆருக்கு ‘புரட்சித் தலைவர்’ என்று பட்டம் சூட்டியவர். அதுவரை புரட்சி நடிகராக இருந்த எம்ஜிஆர் புரட்சித் தலைவரானார்.

அவர் வழியில் ஜெயலலிதாவுக்கும் புரட்சித் தலைவி பட்டம் வழங்கப்பட்டது. சினிமாவில் எதிர்பாராத விதமாக நுழைந்ததை போலவே அரசியல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த ஜெயலலிதாவுக்கு, எம்ஜிஆர் முன்னிலையில், மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் வெள்ளி செங்கோல் வழங்கி “புரட்சி தலைவி” என்ற பட்டம் வழங்கப்பட்டது. இதன் மூலம், தனது அரசியல் வாரிசாக ஜெயலலிதாவை சொல்லாமல், சொல்லி மறைந்தார் எம்ஜிஆர். மதுரை மாநாட்டில் ஜெயலலிதாவுக்கு புரட்சித் தலைவி பட்டத்தை, மறைந்த முன்னாள் அமைச்சரும், திருச்சி புறநகர் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளராக இருந்தவருமான ஆர்.சௌந்தர்ராஜன் வழங்கினார். இவர் ஒரு திரைப்பட நடிகரும் ஆவார். பெரும்பாலும் எம்ஜியார் நடித்த திரைப்படங்களில், குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

இதையடுத்து, 1991 ஆம் ஆண்டில் சென்னை உட்லன்ட்ஸ் ஹோட்டலில் நடந்த கூட்டத்தில் “புரட்சி தலைவி” என ஜெயலலிதாவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். பின்னாட்களில் அம்மு என்று அழைக்கப்பட்ட ஜெயலலிதா முதல்வரான பிறகு, அம்மா என்றும் அதிமுக தொண்டர்களால் பாசத்தோடு அழைக்கப்பட்டார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா புரட்சித் தாய் என அழைக்கப்பட்டார். தியாக தலைவி என்றும், சின்னம்மா என்றும் அழைக்கப்பட்டு வந்த சசிகலா, திடீரென புரட்சித் தாயானார். அவருக்கு அப்படத்தை வழங்கியது, அவரது ஆதரவு நிர்வாகத்தில் உள்ள ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சிதான். அந்த சேனலில்தான் முதன்முதலாக சசிகலாவை புரட்சித் தாய் சின்னம்மா என்று அழைத்தார்கள்.

புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி, புரட்சித் தாய் என பல்வேறு புரட்சி பெயர்கள் தமிழக அரசியலில் குறிப்பாக, அதிமுகவில் சூட்டப்பட்டு வந்த நிலையில், அந்த வரிசையில் புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்துள்ளார்.

தமிழகத்தைப் பொறுத்தளவில் வளர்ச்சிக்கு பஞ்சமிருந்தாலும், புரட்சிகளுக்கு பஞ்சமிருக்காது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal