‘பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி’ என டி.டி.வி.தினகரன் தஞ்சையில் சூசகமாக அறிவித்திருக்கிறார்.

தஞ்சையில் இன்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

‘‘மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி நடத்தியது எழுச்சி மாநாடு அல்ல. இது பழனிச்சாமியின் வீழ்ச்சி மாநாடு. மாநாட்டில் 20 லட்சம் பேர் கலந்து கொள்ளவில்லை. அதிகபட்சமாக 2 முதல் 2.5 லட்சம் பேர் தான் பங்கேற்று இருப்பார்கள். இந்த தகவலை மாநாட்டுக்கு சென்றவர்கள். ஏன் எடப்பாடி பழனிச்சாமி நண்பர்கள் என்னிடம் கூறினர்.

கடந்த ஆட்சியில் மு.க.ஸ்டாலின் எந்த திட்டத்திற்கு எதிரெல்லாம் போராட்டம் நடத்தினாரோ தற்போது அவர் முதலமைச்சராக இருந்து அந்த எதிர்ப்பு திட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்கிறார். மு.க.ஸ்டாலினுக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் எந்த வேறுபாடும் இல்லை. தி.மு.க, அ.தி.மு.க.வுக்கு மாற்று அ.ம.மு.க. தான். தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என்று பல மாணவர்கள், பெற்றோர்கள் கூறி வருகின்றனர்.

எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ஜ.க.வுடன் எனக்கு எப்போதுமே உறவு இருந்தது கிடையாது. நண்பர்கள் இருக்கிறார்கள் அவ்வளவு தான். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்றாலும் நாங்கள் தனித்து போட்டியிட தயாராக இருக்கிறோம். ஒருவேளை கூட்டணி என்று இருந்தால் அது தேசிய கட்சியுடன் தான் இருக்கும். தனித்து இருந்தால் நாங்கள் தான் தலைமை. சுப்ரீம் கோர்ட், காவிரி ஆணையத்தின் தீர்ப்பையே மதிக்காமல் தமிழகத்திற்கு தண்ணீர் தர மாட்டோம் என கர்நாடக அரசு கூறி வருகிறது.

இதனால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக முதலமைச்சர் உடனடியாக மத்திய அரசுடன் இணைந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓ. பன்னீர்செல்வமும், தானும் இணைந்து செயல்பட வேண்டும் என முடிவெடுத்து இருக்கிறோம். வருங்காலத்தில் அதற்கான திட்டங்கள் வகுக்கப்படும். சி.ஏ.ஜி அறிக்கையின் படி மத்திய பா.ஜ.க. ஆட்சியில் ஊழல் நடந்திருந்தால் அதற்கு எதிராக மக்கள் தீர்ப்பளிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal