தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று இரவு 8 மணி அளவில் டெல்லியிலிருந்து சென்னை வருகிறார். அதற்குள் அ.தி.மு.க.வின் மாநாடு, ஓ.பி.எஸ்.ஸின் மா.செ.க்கள் கூட்டம், தி.மு.க. இளைஞரணியின் நீட்டுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டம் எல்லாம் முடிந்து மயான அமைதியாக ஆகிவிடும் தமிழகம்.

அடுத்து, ஆர்.என்.ரவி டெல்லி சென்று உள்துறை மற்றும் மூத்த அமைச்சர்களிடம் என்ன பேசினார் என்பது பற்றி டெல்லி மேலிட வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம்.

‘‘சென்னையில் நடக்கும் போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். சென்னை போராட்டத்தை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்துள்ளார். மதுரை தவிர்த்து தமிழ்நாடு முழுக்க இன்று போராட்டம் நடைபெறுகிறது.

நீட் குறித்து ஆளுநரின் பேச்சு, மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தராததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுக்க மாவட்ட தலைநகரங்களில் இந்த போராட்டம் நடைபெறுகிறது. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த போராட்டம் நடைபெறுகிறது. கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிலையில்தான் நீட் எதிர்ப்பு போராட்டத்திற்கு இடையே தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று இரவு 8 மணி அளவில் டெல்லியிலிருந்து சென்னை வருகிறார்.

சமீபத்தில்,நீட் தேர்விற்கு எதிரான மசோதாவை நான் ஆதரிக்க மாட்டேன். அதில் நான் கையெழுத்து போட்டிருக்க மாட்டேன் என்று சமீபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். இதற்கு திமுகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நீட் விலக்கை ஆளும் திமுக அரசு தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக கொண்டு வந்தது. அதன்படியே ஆட்சிக்கு வந்தது நீட் தேர்விற்கு எதிராக தமிழ்நாடு அரசு மசோதா கொண்டு வந்தது. இந்த மசோதா பல நாட்களாக ஆளுநர் ஆர். என்.ரவியால் டெல்லிக்கு அனுப்பப்படாமல் முடங்கி கிடந்தது.

அதன்பின் இந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி இருந்தார். இதையடுத்து தமிழ்நாடு அரசு மசோதாவில் மாற்றம் செய்து மீண்டும் ஆளுநருக்கு அனுப்பியது. இதையடுத்து பெரும் தாமதத்திற்கு பின் இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். தற்போது இந்த சட்டம் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில்தான் ஆளுநர் ஆர். என் ரவி டெல்லி சென்றுவிட்டு தமிழ்நாடு திரும்ப உள்ளார். இதில் திமுகவிற்கு எதிராக முக்கியமான ரிப்போர்ட் ஒன்றை ஆர். என் ரவி டெல்லியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. திமுகவினருக்கு எதிரான ஊழல் விவகாரங்கள் குறித்து ட்ரங்க் பெட்டியில் பல விசயங்களை ஆளுநரிடம் அண்ணாமலை கொடுத்திருந்தார். பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக பைல்ஸ் 2.0 என்ற பெயரில் இந்த ஆவணங்களை ஆளுநரிடம் கொடுத்தார்.

அது குறித்து சில ரிப்போர்ட்டுகளை டெல்லிக்கு கடந்த வாரம் அனுப்பி வைத்திருந்தார் ரவி. அதில் உள்ள விசயங்கள் பற்றி உள்துறை அதிகாரிகளிடம் விவாதித்துள்ளாராம் ஆளுநர் என்று கூறப்படுகிறது. 2024 லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டின் பக்கம் மத்திய விசாரணை அமைப்புகள் தனது ஃபோகசை திருப்பி உள்ளது. இந்த நிலையில்தான் ஆளுநர் ரவி முக்கியமான பைல்களுடன் டெல்லி சென்றுவிட்டு அதை அங்கே அளித்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அந்த ஃபைல்களில் இடம் பெற்றுள்ளவர்கள் மீது விசாரணை அமைப்புகள் ரெய்டு நடத்தலாம். இதனால் தி.மு.க.வின் மூத்த அமைச்சர்களே திக் திக் என இருக்கிறார்கள்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal