அரசியல் விமர்சகரும், பத்திரிகை யாளருமான சவுக்கு சங்கர் அ.தி.மு.க.வில் ‘தேர்தல் குழு ஆலோசகராக’ நியமிக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டதாக அறிவிப்பு ஒன்று வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டு ‘வெளியான’ அந்த அறிக்கையில், ‘‘ பாரத பிரதமரை முடிவு செய்யும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தொண்டர்களும், நிர்வாகிகளும் திறம்பட எதிர்கொள்ளும் பொருட்டு, தேர்தல் குழு ஆலோசகராக கழக உறுப்பினர், பத்திரிகையாளர் திரு. சவுக்கு சங்கர் அவர்களை தலைமைக் கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப் பின ஏகமனதுடன் நியமனம் செய்கிறேன்.

கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் தேர்தல் குழு ஆலோசகருக்கு ‘அடிபணிந்து’, கூட்டணி குறித்து கவலை கொள்ளாமல் 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெல்லும் அளவுக்கு திறம்பட செயலாற்றுமாறு தலைமைக் கழகம் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்’’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே மதுரையில் நடக்கும் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க சென்ற சவுக்கு சங்கரிடம் பத்திரிகையாளர்கள், ‘நீங்கள் தி.மு.க., பா.ஜ.க. விமர்சிக்கிறீர்கள். ஏன், ஓ.பி.எஸ்.ஸைக் கூட கடுமையாக விமர்சிக்கிறீர்கள். ஆனால், அ.தி.மு.க.வை விமர்சிப்பதில்¬யே?’ என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு சவுக்கு சங்கர், ‘‘ஆளும் தி.மு.க.வின் அத்துமீறல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறேன். அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கிறது. ஆளும்கட்சியாக வந்தபிறகு ‘அத்து மீறல்’ நடந்தால், அக்கட்சியையும் விமர்சிப்பேன்’’ என்றவர், திரைப்படத்துறையில் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவிற்கு பிறகு விவசாயியாக இருந்து இன்றைக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளராகி மாநாடு நடத்திக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.க.வின் வரலாற்று சிறப்புமிக்க மாநாடு பற்றி செய்தி சேகரிக்க வந்திருக்கிறேன்’’ என்றார்.

இந்த நிலையில்தான், எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டதாக வெளிவந்த அறிக்கை பற்றி நாம் விசாரித்தபோது, அது முற்றிலும் போலித்தன்மையானது (FAKE) என்று தெரியவந்தது. மேலும், தி.மு.க.வை யும், ஓ.பி.எஸ். அணியையும் கடுமையாக விமர்சித்து வந்ததால், இப்படியொரு போலியான அறிக்கையை தயார் செய்து வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி வெளியிடும் அறிக்கையில், நிர்வாகிகளும் தொண்டர்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துவார்.

ஆனால், இந்த அறிக்கையில் சவுக்கு சங்கருக்கு ‘அடிபணிந்து’ என்ற வார்த்தை, அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் எதிர் தரப்பினரால் வெளியிடப்பட்ட போலி அறிக்கை என்பது தெரியவந்தது.

விஞ்ஞானம் விண்ணைத் தொட்டது நமக்கு பெருமைதான்! அதே சமயம் அதே விஞ்ஞானம் பொய்ஞானத்திற்கும் பயன்படுவதுதான் வேதனை அளிக்கிறது..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal