பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரத்தில் போட்டயிட வேண்டும் என்று பா.ஜ.க.வினர் கூறிவந்த நிலையில், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி சொன்ன கதைதான் கொஞ்சம் யோசிக்க வைத்திருக்கிறது.

ராமநாதபுரத்தில் மோடி போட்டியிடுவாரா? மாட்டாரா? என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால் போட்டியிட்டால் எதிர்த்து நின்று சமாளிப்பதற்கான வியூகங்களை தி.மு.க. இப்போதே வகுக்க தொடங்கிவிட்டது.

மீனவர்கள் மாநாடு, பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தை ராமநாதபுரம் தொகுதியில் நடத்தி அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அத்துடன் ராமநாதபுரம் தொகுதியில் மோடி சொன்னதை செய்யவில்லை. மோடி ஆட்சியில் மீனவர்கள் அதிக அளவில் இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டினார்.

கனிமொழி எம்.பி. பேசும்போது, ‘‘ராமநாதபுரம் கலைஞர் மனதில் இடம்பிடித்த தொகுதி. 1958-ல் உதயசூரியன் நாடகம் முதல் முதலில் இங்குதான் நடத்தப்பட்டது. அரங்கேறிய சில நாட்களிலேயே அதுவே கட்சியின் சின்னமாகவும் கிடைத்தது. இந்த தொகுதியில் டெல்லியில் இருந்து யாரோ போட்டியிட போகிறாராம். அவர் ஒரு வரலாற்றை புரிந்துக் கொள்ள வேண்டும்.

1952, 1957, 1962 ஆகிய 3 தேர்தல்களில் இங்கு அரசராக இருந்த சண்முக ராஜேஸ்வர சேதுபதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 1957 தேர்தலில் அண்ணாவும், கலைஞரும், ராஜாவுக்கு எதிராக தங்கப்பன் என்ற வேட்பாளரை நிறுத்தினார்கள். அவர் அரண்மனை வாசலில் குதிரை வண்டி ஓட்டுபவராக இருந்த சாதாரண மனிதர். கடைசியில் ஜெயித்தது ராஜா அல்ல குதிரை வண்டிக்காரர்தான். அவரை வெற்றி பெற செய்தது தி.மு.க. எனவே இங்கே போட்டியிட நினைப்பவர்கள் இந்த வரலாறுகளை படிக்க வேண்டும்’’ என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal