செந்தில் பாலாஜி வழக்கி செப்டம்பர் 30&க்குள் விசாரணையை முடிக்காவிட்டால், சிறப்பு புலனாய்வுக் குழுவு தலைவராக நாகஜோதியை நியமித்து, உச்சநீதிமன்றம் அதிரடி காட்டும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்!

அதிமுக ஆட்சியில் 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆண்டு வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் ரூ 1.62 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.

இந்த புகாரை பாதிக்கப்பட்டதாக கூறப்படும் கணேஷ்குமார் என்பவர் கொடுத்தார். இந்த புகாரின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீஸார், சிபிஐ, அமலாக்கத் துறை என தனித்தனியே 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்த நாகஜோதி மேற்கொண்டு வந்தார். அவர் 2 ஆண்டுகளாக இந்த வழக்கை விசாரித்து வந்தார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிரான சில ஆதாரங்களையும் அவர் சேகரித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத் துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்தி அவரை கைது செய்தனர். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சை முடிந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது 6 மாத கால அவகாசத்தை காவல் துறை கேட்டது. ஆனால் அதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அஹ்சானுதீன் அமனுல்லா அமர்வு மறுத்து எதற்காக கால அவகாசம் என கேட்டனர்.

அதற்கு சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாலும் 5 பிரிவுகளின் கீழ் மோசடி நடந்ததாக கூறப்படுவதால் அதுகுறித்து விசாரிக்கத்தான் கால அவகாசம் கேட்கிறோம் என சொன்னதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளோ, ‘‘உங்களுக்கு என்றைக்குத்தான் பிரச்சினைகள் இல்லை. நீங்கள் நினைத்தால் 24 மணி நேரத்திலும் விசாரணையை முடிப்பீர்கள், 24 ஆண்டுகளானாலும் விசாரணையை முடிக்காமல் இருப்பீர்கள்?’’ என காட்டமாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

தமிழக டிஜிபி, உள்துறை செயலாளரை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி இந்த வழக்கு விசாரணையை எத்தனை நாட்களில் முடிப்பார்கள் என அவர்களே இங்கு வந்து சொல்லட்டும் என நீதிபதிகள் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இத்தனை கண்டிப்புக்கு பிறகு உச்சநீதிமன்றம் 2 மாதங்கள் மட்டுமே கால அவகாசம் கொடுத்துள்ளது. அதாவது வரும் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் காலக்கெடு முடிவடைகிறது.

மேலும் கால நீட்டிப்பு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. ஒரு வேளை செப்டம்பர் 30க்குள் தமிழக அரசு விசாரணையை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் 2 ஆண்டுகளக விசாரணை நடத்தி வந்த நாகஜோதி இரவோடு இரவாக ஆவண காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக ஸ்டாலின் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இந்த கேஸ் விவரங்களை படித்து விசாரணையை தொடங்கி செப்டம்பர் 30க்குள் முடிப்பது என்பது சாத்தியமில்லை என்றே தெரிகிறது. அவ்வாறு விசாரணை முடிவடையாத பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகி, நேர்மையாக செயல்பட்ட நாகஜோதி மாற்றப்பட்ட விவகாரத்தையும் எஸ்ஐடி அமைப்பது குறித்தும் கோரிக்கை விடுப்பார்கள் என தெரிகிறது. அவ்வாறு எஸ்ஐடி உருவாகும் பட்சத்தில் அந்த குழுவின் தலைவராக நாகஜோதியை நீதிபதிகளாகவே முன்வந்து நியமிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

உச்சநீதிமன்றம் அடுத்த அதிரடியை எப்போது காட்டப் போகிறது என்ற எதிரபார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal