செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கை விசாரித்து வந்த சென்னை குற்றப்பிரிவு துணை காவல் ஆணையர் நாகஜோதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த அனைத்து பொறுப்புகளும் புதிதாக துணை ஆணையராக நியமிகப்பட்டுள்ள ஸ்டாலினிடம் வழங்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுபடி வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் இந்த வழக்கு தொடர்பாக உண்மைகள் அனைத்தையும் ஆய்வு செய்து விசாரணை துணை ஆணையர் ஸ்டாலின் முடிக்க வேண்டும்.

செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை உச்ச நீதிமன்றம் நேரடியாக கவனித்து வரும் நிலையில், முதன்மை விசாரணை அதிகாரியாக பணியாற்றி வந்த நாகஜோதியை தமிழ்நாடு அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது. அவர் தற்போது ஆவண காப்பக எஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் இந்த பணியிட மாற்றத்தை மேற்கொள் காட்டி விசாரணை குழு அமைக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் நீதிமன்றத்தை நாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கில் பணம் லஞ்சம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றி மோசடி செய்ததாக அவர் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக அவரது அமைச்சர் பதவி பறிபோனதுடன் வழக்கும் தொடரப்பட்டது.

இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக சென்னை குற்றப்பிரிவு துணை காவல் ஆணையர் நாகஜோதி நியமிக்கப்பட்டார். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அவர் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு விடுதலை அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு காவல்துறை விசாரணை நடத்தி 2 மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும், அமலாக்கதுறை விசாரணை நடத்த அனுமதி வழங்கியும் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து அமலாக்க துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது புழல் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார். இதையடுத்து தமிழ்நாடு அரசு சார்பில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 6 மாத காலம் அவகாசம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையில் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் தமிழ்நாடு காவல்துறை விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், செந்தில் பாலாஜி வழக்கில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை அதிகாரியாக இருந்து வந்த நாகஜோதியை மாற்றம் செய்திருப்பதால், செந்தில் பாலாஜியை காப்பாற்றும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal