அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:- நாகர்கோவிலில் வசிக்கும் தனிஷ்- ஷைனி தம்பதியினர் தங்களது 3 வயது ஆண் குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாக சில நாட்களுக்கு முன்னர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு குழந்தையின் நோய் தன்மையைப் பரிசோதனை செய்யாமல், வெறிநாய் கடிக்கான மருத்துவ சிகிச்சை அளித்துள்ளனர். ஒருகட்டத்தில் குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் பெற்றோரிடம் தெரிவித்ததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையின் உடலில் அசைவு இருப்பது தெரிய வந்த நிலையில், உடனடியாக குழந்தையை கேரள மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்ததாக செய்திகள் தெரிவித்தன.

கேரளாவில் குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழந்தைக்கு எலிக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு, அதற்குண்டான சிகிச்சைகளை துரித நிலையில் மேற்கொண்டதன் காரணமாக, குழந்தையின் உடல்நிலை படிப்படியாக சீராகி, தற்போது குழந்தை நல்ல நிலையில் இருப்பதாக குழந்தையின் தாய் ஷைனி தெரிவித்ததாக செய்திகள் வந்துள்ளன. தசைப்பிடிப்புக்குச் சென்ற விளையாட்டு மாணவி காலை இழந்ததுடன், தனது உயிரையும் இழந்துள்ளார். சிறு குழந்தையின் கை தவறான சிகிச்சையால் அகற்றப்பட்டு, தொடர்ந்து உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உலுக்கியது.

அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்து மாத்திரை கிடைக்காத கொடுமை. ஆனால், சுகாதாரத்துறை மந்திரிக்கோ ஓட்டப் பந்தயங்களைத் துவக்கி வைப்பதற்கே நேரம் போதவில்லை. இந்த திமுக அரசின் சுகாதாரத்துறை மந்திரி, மக்கள் நலன் காக்கும் மந்திரியா? அல்லது விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் மந்திரியா? என்பதே சந்தேகமாக உள்ளது.

தமிழகத்தின் தலையெழுத்து, முதலமைச்சரின் மகன் விளையாட்டுத்துறை அமைச்சர் என்பதால் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளையாட்டுப் பயிற்சியாளராக வலம் வந்து துறையில் கவனம் செலுத்தாத காரணத்தால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் போதிய மருத்துவ உதவி கிடைக்காமல் அவதியுறுகிறார்கள். அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் நோய்த் தன்மை குறித்து பரிசோதிக்காமல் கவனக் குறைவாக கையில் கிடைத்த மருந்தை நோயாளிகளுக்கு செலுத்துவது மிகவும் கொடுமையானதாகும். இதுபோன்ற தவறுகளை யார் செய்தாலும் அவர்கள் மீது தி.மு.க. அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனியாவது, சுகாதாரத் துறை மந்திரி, அவரது துறையில் முழு கவனம் செலுத்தி, அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal