மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அருகிலுள்ள விநாயகர் கோயிலின் பூசாரியான ஹரிஹரனை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஜெ.தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தியாகராய நகர் அருளாம்பாள் தெருவை சேர்ந்தவர் கோவில் பூசாரி ஹரிஹரன்(42). இவர் போயஸ் தோட்டத்தில் ஜெயா டிவி கட்டிட காம்பவுண்ட அருகே உள்ள பிள்ளையார் கோவிலில் தினமும் பூஜை செய்து வருகிறார். இந்நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும் அவருடைய கணவர் மாதவனும் தன்னை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரில் 20 ஆண்டுகளாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் தினமும் பிள்ளையார் கோவிலில் பூஜை செய்து வருகிறேன். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா அனுமதியுடன் பிள்ளையார் கோவில் மற்றும் சிவன் கோவிலில் பூஜை செய்து வருகிறேன். அதற்கான செலவு மற்றும் சம்பளத்தை மாதந்தோறும் சசிகலா கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 15ம் தேதி காலை 8.30 மணியளவில் வழக்கம் போல் நான் கோவிலில் பூஜை செய்ய சென்றேன். அப்போது ஜெ.தீபா, அவரது கணவர் மாதவன் உட்பட 50 பேர் என்னை பூஜை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தினர். உன்னை யார் பூஜை செய்ய விட்டது? என தகாத வார்த்தையால் பேசி தாக்க முயன்றதாக ஹரிஹரன் புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் இனி இந்த கோவிலில் பூஜை செய்ய வந்தால் உன்னை கொலை செய்து விடுவோம் என ஜெ.தீபா, மாதவன் உட்பட பலரும் மிரட்டினார்கள். மேலும் பிள்ளையாரின் வெள்ளி கிரீடத்தையும் பறிக்க முயன்றனர்.

தனக்கு கொலை மிரட்டல் விடுத்த ஜெ.தீபா, மாதவன் மற்றும் அவர்களுடன் வந்த 50 பேர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal