அமைச்சர் செந்தில்¢ பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். பெரும்பாலான கேள்விகளுக்கு ‘தெரியாது… ஞாபகமில்லை!’ என்றே பதில் தருகிறாராம். இதனால், இன்றுடன் கஸ்டடி முடிவதால், மேலும் கஸ்டடி கேட்க அமலாக்கத்துறை முடிவு செய்தப்பதாக தகவல்கள் கசிகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவரை நீதிமன்ற உத்தரவின்படி அமலாக்கத் துறை அதிகாரிகள் 5 நாட்கள் காவலில் எடுத்தனர். அந்த வகையில் அவரை கடந்த 7ஆம் தேதி இரவு முதல் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செந்தில் பாலாஜியிடம் என்னென்ன கேள்விகளை கேட்க வேண்டும் என்ற அடிப்படையில் 400 கேள்விகளை அமலாக்கத் துறையினர் தயார் செய்து வைத்திருந்தனராம். நாளொன்றுக்கு 50 கேள்விகளை கேட்க திட்டமிட்டிருந்தனர். அந்த வகையில் செந்தில் பாலாஜியிடம் தினந்தோறும் 9 மணி நேரம் முதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரிடம் தம்பி அசோக்குமார் கரூரில் கட்டி வரும் சொகுசு பங்களா குறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பினராம்.

மேலும் அந்த பங்களாவில் உங்களுக்கு ஏதேனும் சம்பந்தமிருக்கிறதா என கேட்டனராம். அதறகு செந்தில் பாலாஜி இல்லை என பதிலளித்தாராம். செந்தில் பாலாஜி பெரும்பாலான கேள்விகளுக்கு தெரியாது, அப்படியா எனக்கு நினைவில்லை என்றே தெரிவித்து வருகிறாராம். அது போல்தான் தம்பியின் வீடு குறித்த கேள்விக்கு அவர் வீட்டை எப்படி கட்டி வருகிறார் என்பது குறித்து என்னிடம் தம்பி கூறியதாக நினைவே இல்லை என கூறிவிட்டாராம். செந்தில் பாலாஜியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சில கேள்விகளுக்கு இது உங்களுடையதா என கேட்டதற்கு இல்லை என கூறியுள்ளார். அதே சமயம் அதிகாரிகள் அப்போ இது உங்கள் தம்பியுடையதா என கேட்ட போது என்னுடையது இல்லை அவ்வளவுதான் என கூறினாராம். அமலாக்கத் துறையினர் எதிர்பார்த்த கேள்விகளுக்கு செந்தில் பாலாஜியிடம் இருந்து பதில்கள் வரவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அவருடைய கஸ்டடி நீட்டிக்கவும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. பண மோசடி குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த பணம் வேறு எந்த நிறுவனத்திலாவது முதலீடு செய்யப்பட்டதா என்பது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. பெரும்பாலான கேள்விகளுக்கு எனது தம்பிக்குத்தான் தெரியும் என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இது பற்றி அதிகாரிகள் வட்டாரத்தில் பேசியபோது, ‘‘சார், ஆவணங்களை ஆதாரமாக வைத்துக்கொண்டு கேட்கும் போதே செந்தில் பாலாஜி, தான் புத்திசாலியாக இருப்பது போல் ‘தெரியாது… ஞாபகமில்லை’ என்கிறார். அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் இந்த மாதிரி பதிலை சொல்லி விடலாம். ஆனால், நீதிமன்றத்தில் ஆவணங்களை ஆதாரமாக கொடுக்கும் போது, அங்கு பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.

தவிர, எங்களிம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் பாதிக்குதான் பதில் சொல்லியிருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி! சொத்து ஆவணங்கள், முறைகேடாக பார் நடந்தது, பாட்டிலுக்கு பத்து ரூபாய் அப்பட்டமாக வாங்கியது தொடர்பாக இன்னும் அவரிடம் நிறைய விசாரிக்க வேண்டி இருக்கிறது. எனவே, மேலும் அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தை நாடுவோம்!

மேலும், அவர் எங்களுக்கு சரியான பதிலை கொடுக்க மறுக்கிறார். எப்படியிருந்தாலும் நீதிமன்றத்திற்கு பதில் அளித்துதானே ஆகவேண்டும்’’ என்றனர் ஆதங்கத்துடன்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal