அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி சட்டப்படி 99 சதவீதம் கைப்பற்றினாலும், ஓ.பி.எஸ். அணியும் அவருக்கு ‘விடாது விரட்டி’ வருவதுதான் அவ்வப்போது, எடப்பாடி தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

ஆகஸ்ட் 20ம் தேதி அ.தி.மு.க.வின் மாநில மாநாட்டை மதுரையில் கூட்டி, சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோரை அழைத்து வந்து கெத்து காட்டத் தயாராகி வரும் நிலையில், அன்றைய தினம் ஓ.பி.எஸ். அணி மாவட்டச் செயலாளர் கூட்டத்தை கூட்டி, ‘ஜெர்க்’ கொடுத்திருகிறது.

தி.மு.க.வின் ‘பி டீம்’ ஆக ஓ.பி.எஸ். செயல்படுவதாக எடப்பாடி தரப்பு குற்றஞ்சாட்டி வந்த நிலையில், தி.மு.க.வின் ‘பி டீம்’ எடப்பாடி தரப்புதான் என ஓ.பி.எஸ். அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் வலைதளப் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

இந்த நிலையில்தான் ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து எடப்பாடி தொகுதியில் 2021 ல் தி.மு.க. நிறுத்திய வேட்பாளர் சம்பத்குமாரை யாருக்காவது தெரியுமா..?

எடப்பாடியை எதிர்த்து முத்துச்சாமி, செல்வகணபதி போன்ற செல்வாக்கு படைத்தவர்களை நிறுத்தி எடப்பாடியை தோற்கடிக்க முயலாமல் பரிட்சயமில்லாத வேட்பாளரை தி.முக. நிறுத்தியது எதற்காக..?

அதே போல் கொளத்தூர் தொகுதியில் 2011 சட்ட மன்ற தேர்தலில் புரட்சி தலைவி அம்மாவால் களமிறக்கப்பட்டு மு.க. ஸ்டாலினை தண்ணி குடிக்க வைத்த சைதை துரைசாமியை அங்கே நிறுத்தாமல் தொகுதிக்கே சம்பந்தமில்லாத ஆதிராஜாராம் என்கிற பலவீனமான வேட்பாளரை 2021ல் நிறுத்தி மு.க.ஸ்டாலினுக்கு அணுசரனையாக எடப்பாடி நடந்து கொண்டது ஏன்..?

அதுமட்டுமின்றி, சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக, வலுவான வேட்பாளரை நிறுத்தாமல் தொகுதியை பா.ம.க.வுக்கு தள்ளிவிட்டு கசாலி என்பவர் வேட்பாளராக்கப்பட்டதோடு அவருக்கு உரிய அளவில் தேர்தல் செலவுக்கான பணமும் தரப்படாமல் பார்த்துக் கொள்ளப்பட்டதே அது ஏன்..?

அதே சமயம், ஓ.பி.எஸ் போட்டியிட்ட போடி தொகுதிக்கு மட்டும் தி.மு.க.வேட்பாளராக முன்னாள் எம்.பி.யும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தங்கதமிழ் செல்வன் நிறுத்தப்பட்டதோடு அவருக்கு தி.மு.க.வும் கனத்த தொகை கொடுத்தது!

அதை விட கனத்த தொகையை தங்கதமிழ்ச் செல்வனுக்கு எடப்பாடி தரப்பில் இருந்து ரகசிய பட்டுவாடா செய்யப்பட்டு எப்படியாவது ஓ.பி.எஸ்.ஸை தோற்கடித்துவிடு என்று தங்க தமிழ் செல்வனிடம் எடப்பாடி தொடர்பு கொண்டு பேசினாரே…

இல்லை என்று எடப்பாடி தன் மகன் மீது சத்தியம் செய்து மறுக்க முடியுமா..?

இப்படியாக எடப்பாடி -ஸ்டாலின் இடையிலான இரு தரப்பு ஒப்பந்த அரசியல் காரணத்தால் தான் சம்பந்தி மீதான 4500 கோடி டெண்டர் முறைகேடு தொடங்கி கொடநாடு கொலை கொள்ளை வழக்கு வரை அத்தனை விவகாரங்களும் ஆளும் தி.மு.க. அரசால் மழுங்கடிக்கட்டு வருகிறது…

இப்பச் சொல்லுப்பா தி.மு.க.வின் ‘பி டீம்’ யாரு..?’’ என்று பதிவிட்டிருக்கிறார்.

தி.மு.க.வின் ‘பி டீம்’ ஆக யார் செயல்படுகிறார்கள் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal