பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் ஆளுங்கட்சிகளுக்கு எப்படி நெருக்கடிகளை நேடியாகவும், மறைமுகமாகவும் கொடுத்து வருகிறதோ, அதே போல் கூட்டணியில் இருக்கும் கட்சியான அ.தி.மு.க.விற்கும் மறைமுகமாக ‘கூட்டணி தொடர்பாக’ நெருக்கடி கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இது பற்றி மேலிட வட்டாரத்தில் உள்ள அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணி என்றுசொல்லி வரும் நிலையில், அதிமுக யார் யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்ற ஆர்வம் எழுந்துவருகிறது. அத்துடன், பாஜகவின் அரசியல் அதிரடி ஆரம்பமாகி உள்ளது. டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் விவகாரத்தில் தொடர் பிடிவாதம் பிடித்து வருகிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. ஒன்றுபட்ட அதிமுகவை விரும்பும் பாஜகவோ, எடப்பாடியை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாத சூழலில் உள்ளதாக தெரிகிறது.

திமுகவைவிட அதிக வாக்குவங்கியை பெற்றுள்ள அதிமுகவை இழக்க மனதில்லாத பாஜகவோ, ஒருங்கிணைந்த அதிமுக என்ற விஷயத்தை அவ்வளவு எளிதில் விடாது என்றும், எப்படியும் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி தரும் வேலையை ஆரம்பித்துவிட்டது. எதிர்பார்த்தபடியே, பாஜகவின் “காய்நகர்த்தல்” அதிமுகவிடம் ஆரம்பமாகி உள்ளதாகவும், இதற்காக பாஜக கையில் எடுத்துள்ள கட்சிகள் ஒன்று அமமுக, மற்றொன்று பாமக என்றும் தகவல்கள் வருகிறது.

பாமகவை பொறுத்தவரை இன்றுவரை வடமாநிலங்களில் வலுவாகவே உள்ளது. நெய்வேலி போராட்டத்தின்போதும், தன் பலத்தை அதிகமாகவே வெளிப்படுத்தியிருந்தது பாமக. வழக்கமாக தேர்தல் சமயங்களில் வெற்றி வாய்ப்பினை தீர்மானிக்கும் மிக மிக முக்கியமாக பாமக இருந்து வருகிறது. அந்தவகையில், இந்த முறை பாமகவின் தேர்தல் கூட்டணி முடிவு மிகவும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. சமீப காலம்வரை திமுகவுடன் பாமக கூட்டணி வைக்கும் என்றார்கள். ஆனால், நெய்வேலி போராட்டத்தில் அந்த கணிப்புகள் தகர்ந்தன. அப்படியானால், அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க போகிறதா? என்ற அடுத்த சந்தேகம் எழுந்தது. ஆனால், இந்த கணிப்பையும் அன்புமணி ராமதாஸ், தன்னுடைய பேட்டியில் நொறுக்கிவிட்டார்.

விவசாய நிலங்களை கையகப்படுத்தும்போது விலையை கூடுதலாக கொடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறாரே. அவர் ஊரில் வைத்துள்ள 200 ஏக்கரை அரசு அதிக விலை கொடுத்து கேட்டால் கொடுத்துவிடுவாரா எடப்பாடி? என்று அன்புமணி கேட்ட கேள்வியை அதிமுகவே எதிர்பார்க்கவில்லை.

கடந்த தேர்தல்களை எடுத்து கொண்டால், பாமக இல்லாமல் அதிமுகவின் வெற்றியை யோசிக்க முடியாது. அவ்வளவு ஏன், எடப்பாடியின் கோட்டையான சேலத்தில் பாமகவின் தயவு தேவையாகவே இருக்கிறது. எனவே, பாமகவை தவிர்த்துவிட்டு, எடப்பாடியால் கூட்டணி பற்றி யோசிக்க முடியாது. அதனால்தான், அன்புமணி இப்படி நறுக்கென கேட்டதற்குகூட, இதுவரை அதிமுகவில் இருந்து யாருமே பதில் சொல்லவில்லை. பாமக விஷயத்தில் எடப்பாடி தரப்பு அமைதி காக்கிறது.

அன்புமணி இப்படி சொல்லிவிட்டதாலேயே, அதிமுகவுடன் பாமக கூட்டணி இல்லையோ என்ற உறுதியான முடிவுக்கும் வந்துவிட முடியாது. காரணம், தேர்தல் நெருங்கும் சமயத்தில், பாமகவின் “கூட்டணி பேரமாகவும்” இந்த பேச்சு இருக்கலாம். அதேசமயம், பாஜகவின் பின்புலம் இல்லாமல், அன்புமணி அதிமுகவை சாடியிருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.

இந்த சூழலில்தான், அமமுக என்ட்ரி தருகிறது. டிடிவி தினகரன் 4 நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டி தந்திருந்தார். அதில், “பெரம்பலூரில் இருந்து கன்னியாகுமரி வரைக்கும் அதிமுகவுக்கு மொத்தமே 10 சதவீதம் வாக்கு உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு, தருமபுரி, சேலத்தில் 10 சதவீத வாக்கு உள்ளன. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், நாமக்கல், ஈரோடு தொகுதிகளில் 15 சதவீதம் மட்டுமே உள்ளன. பாமக இல்லாமல் வட தமிழகத்தில் அதிமுகவால் வாக்கு பெற முடியாது. எடப்பாடி தொகுதியிலேயே பாமக ஆதரவால் தான் பழனிசாமி வெற்றி பெற்றார்” என்று கூறி எடப்பாடியை சீண்டியிருந்தார்.

தினகரனின் இந்த பேச்சுக்கு பின்புலமாகவும் பாஜக இருப்பதாக சொல்கிறார்கள். அதாவது, ஒருபக்கம் அன்புமணி, இன்னொரு பக்கம் தினகரனை வைத்து, எடப்பாடியை “பணிய” வைக்கும் முயற்சியைதான் பாஜக தற்போது முன்னெடுப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். இது அதிமுக மேலிடத்துக்கும் நன்றாக தெரியும் என்பதால்தான், பாஜகவையும் விமர்சிக்க முடியாமல், பாமகவுக்கும் பதிலடி தர முடியாமல் அதிமுக திணறுகிறதாம். எனவே, கூட்டணி விஷயத்தில் எடப்பாடி என்ன செய்ய போகிறார்? தினகரன், ஓபிஎஸ்ஸை அழைத்து கொள்ள போகிறாரா? பாமக, பாஜக இல்லாமல் கூட்டணி அமைக்க போகிறாரா? தெரியவில்லை.

இதனிடையே, அதிமுகவுடனும் கூட்டணி இல்லாமல், திமுகவுடனும் கூட்டணி இல்லாமல், அமமுகவுடன் பாமக தனி அணி அமைக்க போகிறதாம். டாக்டர் ராமதாஸ் பிறந்த நாளை ஒட்டி, அவருக்கு ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அப்போது, டாக்டர் ஐயாவிடம், ஓபிஎஸ் போனில் பேசியதாக சொல்கிறார்கள். குறிப்பாக, “கடந்த எம்பி தேர்தலில் அத்தனை கட்சிகள் கூட்டணியில் சேர்ந்தும்கூட 53 சதவீதம் ஓட்டுகள் பெற முடிந்தது. இப்போது அதிமுக பிரிந்திருக்கும்போது, எப்படி வெற்றி பெற முடியும்? மேற்கு மாவட்டங்களில், எங்கள் ஆதரவு இல்லாமல் வெற்றி பெற முடியாது என்பதை மாநாட்டில் நிரூபிப்போம். நாம் இணைந்து செயல்படுவதற்கு, வன்னியர்களுக்கான, 10.5 உள் இட ஒதுக்கீடு பிரச்சனை தடையாக இருக்காது.

வட மாவட்டங்களில் வன்னியர்கள், தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் தான். கடந்த தேர்தல்களில், தர்மபுரியில் அன்புமணியும், தேனி தொகுதியில் ரவீந்திரநாத்தும் சொந்த செல்வாக்கில் வெற்றி பெற்று பலத்தை நிரூபித்து உள்ளதால், அதுவே நமக்கு பிளஸ் பாயிண்ட்தான்.. £திக்கு பாதி என்ற பார்முலாவை உருவாக்கலாம் என்றெல்லாம் டாக்டர் ஐயாவிடம் ஓபிஎஸ் சொன்னாராம்.

ஆனால், இதற்கு பாமக தரப்பு என்ன பதில் சொன்னது என்று தெரியவில்லை. சுருக்கமாக சொல்லப்போனால், அன்புமணி, தினகரனை வைத்து, அதிமுகவிடம் தன் அதிரடியை பாஜக துவக்கி இருக்கிறது என்றால், பாமக – & அமமுக கூட்டணி அமைக்கும் முயற்சியும் இன்னொருபுறம் நடந்து வருவதாக தெரிகிறது. எனினும், இன்றைய சூழலில் அதிமுகவுக்கான நெருக்கடிகள் சூழ்ந்து வருவதாக தெரிகிறது. அதுவும், சொந்த கூட்டணியிலிருந்தே நெருக்கடிகள் கிளம்பி உள்ளதால், அமைதி காக்க வேண்டிய சூழலுக்கு அதிமுக ஆளாகி இருக்கிறது. எனவே, மதுரையில் நடக்கும் மாநாட்டிற்குப் பிறகுதான் எடப்பாடி பழனிசாமி பாய்வாரா? இல்லை பணிவாரா என்பது தெரியும்?’’ என்றனர்.

தேர்தல் நெருங்க நெருங்க… எத்தனையோ தகவல்கள் றெக்கை கட்டி பறக்க ஆரம்பித்துவிடும்! எது உண்மை? எது பொய்? என்பதும் விரைவில் தெரிந்துவிடும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal