2014 முதல் 2023 வரை 9 ஆண்டுகளில் வங்கிகள் ஒட்டுமொத்தமாக 14.56 லட்சம் கோடி வாரா கடனை தள்ளுபடி செய்திருப்பதாக என மத்திய அரசு தெரிவித்துள்ளது. திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மக்களவையில் ஆகஸ்ட் 7ஆம் எழுப்பிய கேள்விகளுக்கு நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத் கொடுத்த பதிலில் இது தொடர்பான புள்ளிவிவரங்கள் தரப்பட்டுள்ளன.

மொத்தம் ரூ.14,56,226 கோடியில், பெரிய தொழில்கள் மற்றும் சேவைகளின் கடன் தள்ளுபடி ரூ.7,40,968 கோடி. அதே நேரத்தில் 2014 ஏப்ரல் முதல் மார்ச் 2023 வரை கார்ப்பரேட் கடன்கள் உட்பட மொத்தம் 2,04,668 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களை வங்கிகள் திரும்பப் பெற்றுள்ளன.

நிதியாண்டில் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்கள், நிதியாண்டில் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களின் நிகர வசூல் (நிகர தள்ளுபடி) பொதுத்துறை வங்கிகளில் 1.18 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 2022 நிதி ஆண்டில் ரூ.0.91 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. 2023 நிதி ஆண்டில் ரூ.0.84 லட்சம் கோடியாகக் குறைத்திருக்கிறது.

2023 இல் தனியார் வங்கிகளின் நிகர தள்ளுபடி கடன்கள் ரூ.73,803 கோடியாக இருந்தது. 2017-18 நிதியாண்டில் மற்றும் 2023 நிதியாண்டில் தனியார் துறை வங்கிகளின் தொடக்க மொத்தக் கடன்கள் மற்றும் முன்பணங்களின் நிகர தள்ளுபடி விகிதம் முறையே 1.25% மற்றும் 1.57% ஆக இருந்தது. இது பொதுத்துறை வங்கிகளுக்கு 2% மற்றும் 1.12% ஆக இருந்தது.

வாராக் கடன்களை மீட்டெடுக்கவும், குறைக்கவும் அரசாங்கம் மற்றும் ரிசர்வ் வங்கி மூலம் விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன்கள் மார்ச் 31, 2018 இல் ரூ.8.96 லட்சம் கோடியிலிருந்து மார்ச் 31, 2023 இல் ரூ.4.28 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளன.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அதிக வருவாய் ஈட்டுவதற்காக கடன் மீட்பு தீர்ப்பாயங்களின் நிதி அதிகார வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் ஏப்ரல் 8, 2015 அன்று தொடங்கப்பட்டு நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஜூன் 30, 2023 நிலவரப்படி, இந்தத் திட்டத்தின் கீழ் கடன் வாங்குபவர்களுக்கு ரூ.24.34 லட்சம் கோடி மதிப்பிலான 42.20 கோடிக்கும் அதிகமான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்று புள்ளி விபரத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal