
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருக்கும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருக்கிறார். இதை எதிர்த்து வக்கீல் ரவி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் 2 வழக்குகள் தொடர்ந்தார். அதில் ஒரு வழக்கு, இலாகா இல்லாத அமைச்சராக எந்த அடிப்படையில் செந்தில் பாலாஜி பதவியில் இருக்கிறார். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்டது.
மற்றொரு வழக்கு, செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்த தனது உத்தரவை கவர்னர் திரும்ப பெற அதிகாரம் இல்லை என்றும் தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட அமர்வு, கவர்னர் அலுவலகத்துக்கு உத்தரவிட கோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக எழுத்துப்பூர்வ பதிலை மனுதாரர் தரப்பில் இன்று தாக்கல் செய்தனர். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில்தான் இன்றைய தினம் உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது. மேலும் செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதம் இல்லை. அமலாக்கத்துறைக்கு கைது செய்ய அதிகாரம் இருக்கிறது எனவும், ஐந்து நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
எனவே, அமலாக்கத்துறை அதிகாரிகள் எந்நேரமும் சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜியை கஸ்டடி எடுத்து விசாரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
