அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கும் ஏற்பட்டுள்ள உரசல் இன்னமும் ஓய்ந்த பாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது. ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணாமலை தமிழக பா.ஜ.க. தலைவர் பொறுப்பை ஏற்றதும், ஒரே ஒரு விஷயத்தில் தெளிவான கொள்கையுடன் இருக்கிறார்.

அதாவது தமிழகத்தில் பா.ஜனதாவை வலுப்படுத்தி ஆட்சியை பிடிக்கும் வகையில் தனித்துவமான கட்சியாக மாற்ற வேண்டும் என்பதே அவரது ஒருவரி கொள்கையாகும். இதை கருத்தில் கொண்டு தான் அ.தி.மு.க. தலைமையிலான அணியில் இருந்தாலும், அந்த கட்சிக்கு அடிமை போல் இருந்து செயல்பட இயலாது என்பதை கடந்த மாதங்களில் பல தடவை அண்ணாமலை சுட்டிக்காட்டி உள்ளார். இது அ.தி.மு.க. மூத்த தலைவர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தி.மு.க.வை எந்த அளவுக்கு விமர்சனம் செய்து பேசுகிறாரோ அதே அளவுக்கு சில சமயங்களில் அ.தி.மு.க.வையும் அண்ணாமலை விமர்சிக்க தவறுவது இல்லை. இதனால் ஒரு கட்டத்தில் அ.தி.மு.க.-பாஜ.க. கூட்டணி முறிந்து விடுமோ என்றுகூட கருதப்பட்டது. அதை சீரமைக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியையும், அண்ணாமலையையும் டெல்லிக்கு அழைத்து அமித்ஷா சமரசம் செய்தார். அதன்பிறகு சில நாட்கள் மட்டுமே அண்ணாமலை அமைதியாக இருந்தார். இந்த நிலையில் நடைபயணம் தொடங்கியுள்ள அவர் மீண்டும் அ.தி.மு.க. வில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பட்டாசுகளை கொளுத்தி போட்டுள்ளார்.

நடை பயணத்தின் முதல் நாளே அவர் நிருபர்களிடம் பேசுகையில், ‘தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக உழைத்துள்ளார். அவரை பா.ஜ.க. புறக்கணிக்க இயலாது’ என்று கூறினார். இதற்கு அ.தி.மு.க. தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி.தினகரனும் இணைந்து நடத்தும் போராட்டத்தை ஆதரிப்பதாக அண்ணாமலை கூறினார். இது அ.தி.மு.க. தலைவர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் ஜெயக்குமார், உதயகுமார், செல்லூர் ராஜூ உள்பட பலர் அண்ணாமலையை நேரிடையாகவே விமர்சித்து கண்டனம் தெரிவித்தனர்.

இதனால் அ.தி.மு.க.-பா.ஜ.க. உறவில் மீண்டும் உரசல் ஏற்பட்டது. அண்ணாமலையின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் பற்றி டெல்லி பா.ஜ.க. மேலிடத்தில் அ.தி.மு.க. தரப்பில் புகார்கள் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. அதன் அடிப்படையில் அண்ணாமலையிடம் பா.ஜ.க. மேலிடம் விசாரணை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் அண்ணாமலை இன்று (திங்கட்கிழமை) தனது நடைபயணத்தில் சிறு மாற்றம் செய்துள்ளார்.

இன்றைய பொதுக்கூட்டம் மற்றும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்றைய நடைபயணத்தில் அண்ணாமலையுடன் மத்திய மந்திரி பங்கேற்பதாக இருந்தது. ஆனால் பாராளுமன்ற கூட்டத்தில் மத்திய மந்திரி அவசியம் இருக்க வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டு விட்டதால் அவர்கள் வருகை ரத்தானது. இதனால் அண்ணாமலை நடைபயணமும் இன்று மட்டும் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கிடையே மதுரையில் இருந்து புறப்பட்டு அண்ணாமலை சென்னை வந்துள்ளார்.

இதையடுத்து அவர் டெல்லி செல்வார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் இதை மறுத்தனர். டெல்லி மேலிடம் அண்ணாமலைக்கு சம்மன் எதுவும் அனுப்பவில்லை. வேண்டுமென்றே அண்ணாமலை பாத யாத்திரையில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக இப்படி வதந்தி கிளப்பி விடுகிறார்கள் என்று தமிழக பா.ஜ.க. தலைவர்கள் கூறினார்கள். என்றாலும், அண்ணாமலை மதுரையில் இருந்து நடை பயணத்தை நிறுத்தி விட்டு சென்னை திரும்பியது அரசியல் வட்டாரத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal