தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று கானொளி காட்சி வாயிலாக நடந்தது. அப்போது சில மாவட்டச் செயலாளர்களை கண்டித்தும், சீனியர் அமைச்சர் ஒருவரை ஸ்டாலின் எச்சரித்த விவகாரம்தான் அறிவாலயத்தில் அணலடித்துக்கொண்டிருக்கிறது.

தி.மு.க. மா.செ.க்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட மூத்த மா.செ. ஒருவரிடம் பேசினோம்.

‘‘சார், 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. ஆளும் திமுக கட்சி 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் 38-39 இடங்களை வெல்ல வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்து திமுக பணிகளை செய்து வருகிறது. இந்த நிலையில்தான் நேற்று திமுக மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் அமைச்சர்களுக்கு முக்கியமான அறிவுரைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கி இருக்கிறார். அதன்படி முதலில் ஒரு அமைச்சரின் பெயரை சொல்லி. ‘நீங்கள் ஏன் பொது இடங்களில் தொடர்ந்து வாய் தவறி பேசுகிறீர்கள். ஏற்கனவே உங்களை இது தொடர்பாக கண்டித்து இருக்கிறேனே.

ஆனால் ஏன் இன்னமும் வாய் தவறி பேசுவது தொடருகிறது. நாம் இப்போது சோஷியல் மீடியா யுகத்தில் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் பேசுவதை மக்கள் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். வாய் தவறி எதையாவது பேச வேண்டாம். அப்படி பேசினால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரித்தார் ஸ்டாலின்.

அமைச்சர்கள் – மாவட்ட செயலர்கள் சிலர் இடையே ஒற்றுமை இல்லை என்று எனக்கு தகவல் வந்துள்ளது. பல முறை சொல்லிவிட்டேன். எனக்கு இதெல்லாம் தெரியாமல் இருக்காது என்று நினைக்காதீர்கள். உள்ளூர் அளவில் என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியும்.

மாவட்ட செயலாளர்கள் – அமைச்சர்கள் ஒன்றாக செயல்படுவதே மிக முக்கியம். நட்பாக இருங்கள். உங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை பேசி சரி செய்யுங்கள். அதுதான் கட்சிக்கு நல்லது.. உங்களுக்கும் அதுதான் நல்லது. முக்கியமாக யாரும் யாரையும் ஒருமையில் பேச வேண்டாம்.

தேர்தல் பணிகளை தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. லோக்சபா தேர்தல் பணிகள் பற்றி ஏற்கனவே கூறி இருந்தேன். பூத் கமிட்டிகளை புதுப்பிக்க வேண்டும். புதிய நிர்வாகிகளை பூத் கமிட்டிக்கு சேர்க்க வேண்டும். அதற்கான பணிகளை செய்யுங்கள். லோக்சபா தேர்தலில் புதுச்சேரி சேர்த்து 40க்கு 40 நம்முடைய இலக்கு. அதற்கான பணிகளை இப்போதே செய்திடுங்கள். எனக்கு தேர்தல் பணிகள் சுணக்கம் குறித்து எந்த புகாரும் வரக்கூடாது. கவனமாக பணிகளை செய்திடுங்கள்.

சில ஒன்றியச் செயலாளர்கள் தொடர்ச்சியாக கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாகவும் முதல்வருக்கு புகார் சென்றிருக்கிறது. கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் ஒ.செ.க்களை கண்காணிக்குமாறு மா.செ.க்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர்.

குறிப்பாக மலைக்கோட்டை மாவட்டத்தில் ஒரு ஒன்றியச் செயலாளர் கனிமவளக் கொள்ளை, அடிதடி என அவர்மீது ஏகப்பட்ட புகார்கள் கிளம்பியிருக்கிறது. இது தொடர்பாகவும் உளவுத்துறை மூலம் ரிப்போர்ட் கேட்டிருக்கிறாராம் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஏனென்றால், மலைக்கோட்டையில் அனைத்து சேர்மன் பதவிகளையும் தி.மு.க. பிடித்தது. இந்த நிலையில், ‘இதே நிலை’ நீடித்தால் தி.மு.க.விற்கு அவப்பெயர் ஏற்பட்டு விடும் என நினைக்கிறால் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal