ஓ.பன்னீர் செல்வம் மகனும், தேனி எம்.பி.யுமான ஓ-.பி.ரவீந்திரநாத் மீது இளம் பெண் பாலியல் புகார் கூறியிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் எம்.பியுமான ஓ.பி.ரவீந்திரநாத் பாலியல் தொல்லை அளிப்பதாக கூறி சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த காயத்திரி தேவி என்பவர் புகாளிக்க வந்தார். அப்போது பேசிய அவர்,

‘‘எங்கள் குடும்பத்தினரும் ஓ.பன்னீர் செல்வம் குடும்பத்தினரும் நண்பர்களாக பழகி வந்தோம். ஓ.பி.ரவீந்திரநாத்தின் மனைவி ஆனந்தி எனக்கு தோழி. ஆனந்தியின் மற்றொரு தோழியான மலருடன் ஓபி ரவீந்திரநாத்திற்கு தொடர்பு உள்ளது.

என் குடும்ப பிரச்னை காரணமாக எனது கணவரை 2020ஆம் ஆண்டில் விவாகரத்து செய்தேன். இந்த நிலையில் ரவி அண்ணாவின் போனில் இருந்து பேசிய ஒருவர் ஓபி.ரவீந்திநாத் உங்கள் மீது ஆர்வமாக உள்ளார் என பேசினர். நான் அவரை அண்ணாவாகவும், ஓபிஎஸ் அவர்களை அப்பாவாகவும் பார்க்கிறேன்.

ஏப்ரல் ஒன்றாம் தேதி ஓபி.ரவீந்திரநாத் எண்ணில் இருந்து போன் வந்தது. நன்றாக பேசிய அவர், ஒரு கட்டத்திற்கு மேல் ரொம்ப ஆபாசமாக பேசத் தொடங்கிவிட்டார். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால் அவர் என்னை கல்யாணம் செய்து கொள்வதாக கூறியதால் நான் போன் எண்ணை கட் செய்துவிட்டேன்.

‘ஆபாசமாக வீடியோ காலில் வா’ என்று அழைத்துக் கொண்டே இருந்தார். அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் வித்தியாசம் தெரியாதா?; எந்த மாதிரியான எண்ணத்தில் அவர் வீடியோ கால் வர சொன்னார் என்பது எனக்கு நன்றாக தெரியும். ஆண்கள் பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்வதற்கு இதை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

ஓ.பி.ரவீந்திரநாத்திற்கு பெண் குழந்தை உள்ளது. அவர்களுக்கெல்லாம் இது போல் போன் வந்தால் அவர்கள் விட்டுவிடுவார்களா? இது குறித்து ரவீந்திரநாத் மனைவியிடமும் சொல்லி இருந்தேன். மன்னிப்பு கேட்காவிட்டால் நான் மீடியாவிடம் செல்வேன் என கூறிய நிலையில் எனக்கு மிரட்டல்கள் நடக்கத் தொடங்கி உள்ளது.

கடந்த நவம்பர் மாதத்தில் ஓபிஎஸிடமும் சொல்லி இருந்தேன். ஓபிஎஸிடம் பேசும் போது, ‘நான் சொல்வதை கேட்கும் நிலையில் அவர் இல்லை; அம்மாவின் திதிக்கே அவர் வரவில்லை’ ஓபிஎஸ் என்று கூறினார். அவரின் நண்பர் முருகன் என்பவரும் என்னை மிரட்டுகிறார். ஓபி.ரவீந்திரநாத் இரவு முழுவதும் அழைத்த வீடியோ கால்கள் எனக்கு ஆதாரங்களாக உள்ளது. இதனை டிஜிபியிடம் புகாராக அளிக்க உள்ளேன் என காயத்ரி தேவி கூறினார்.

ஓ.பி.ரவீந்திரநாத் மீது இளம் பெண் பாலியல் புகார் செய்துள்ள விவகாரம்தான் தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal