‘தேசிய ஜனநாயக கூட்டணி சுயநலத்துடன் அமைந்தது கிடையாது… தியாக கூட்டணி’ என பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார்.
பாராளுமன்ற மக்களவை தேர்தல் 2024-க்கான வியூகங்களை பா.ஜனதா கட்சி வகுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள எம்.பி.க்களை 11 குழுவாக பிரித்து அவர்களுடன் பிரதமர் மோடி உரையாட முடிவு செய்தார். முதற்கட்டமாக மேற்கு உத்தர பிரதேசம், பிராஜ், கான்பூர்-பண்டேல்காண்ட் பகுதி எம்.பி.க்களை சந்தித்து உரையாடினார்.
அப்போது, எம்.பி.க்கள் தங்களுடைய சொந்த தொகுதியில் உள்ள பிரச்சனைகள் குறித்து பேச வேண்டும். அடிக்கடி நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். திருமணம் உள்ளிட்ட முக்கிய விழாக்களில் கலந்து கொண்டு மக்களை சந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டணி தர்மம் குறித்து அவர் கூறும்போது ‘‘நாங்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி போன்று கிடையாது. தேசிய ஜனநாயக கூட்டணி தியாகத்தை பற்றியது. சுயநலம் பற்றியதல்லஷ’’ எனக் குறிப்பிட்டுள்ளார். பீகாரில் நிதிஷ் குமார் உடன் கூட்டணி வைத்திருந்தோம். அவரை விட நாங்கள் அதிக எம்.எல்.ஏ.-க்கள் வைத்திருந்தோம். என்றாலும் முதல் அமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்தோம்.
ஆனால், கூட்டணி முடிந்த உடன் எதிர்க்கட்சியில் சேர்ந்துவிட்டார். பஞ்சாபில் அகாலி தளம் அரசில், நாங்கள் அதிகமான உறுப்பினர்கள் வைத்திருந்த போதிலும் துணை முதலமைச்சர் பதவி கேட்கவில்லை என்றார்.
நாளை தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, அந்தமான் மாநிலங்களை சேர்ந்த 96 எம்.பி.க்களுடன் உரையாட இருக்கிறார்.