‘அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதால், அரசின் ரகசியங்கள் சிறையின் மூலம் லீக்காக வாய்ப்பிருக்கிறது. இதை வைத்தே ஆட்சியை கலைக்க முடியும்’ என புதிய குண்டை தூக்கிப் போட்டிருக்கிறார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘‘பொழுதுபோகாத காரணத்தால் ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் போராட்டம் அறிவித்துள்ளனர். பொழுது போக்கிற்காக கோடநாடு விவகாரத்தை, கையில் எடுத்து ஓபிஎஸ் போராட்டம் நடத்துகிறார். அச்சாணி இல்லாத வண்டியை டிடிவி தினகரன் ஓட்டுகிறார். அது என்றைக்கும் ஓடாது.

ஊழலை பற்றி பேச திமுகவுக்கு எந்தத் தகுதியும் இல்லை. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சிதான். ஊழலில் திளைத்த திமுகவை மக்கள் மத்தியில் சுட்டிக்காட்டும் பணியை அதிமுக செய்து வருகிறது. ஊழலைச் சுட்டிக்காட்ட அதிமுக என்றும் தயங்கியதில்லை. அண்ணாமலையும் அதனைத் தான் செய்கிறார். அண்ணாமலை அவரது கட்சியை வளர்க்க நடைபயணம் மேற்கொள்கிறார்.

ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி ஆகியோருக்கு நடத்துவதே திமுகவின் முப்பெரும் விழா. உதயநிதியின் மகன் அரசு விழாவில் பங்கேற்பது முறையான செயல் அல்ல’’ என ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

மேலும், ‘‘செந்தில்பாலாஜி துறை அமைச்சராக இருந்தபோதும் இல்லாதபோதும் டாஸ்மாக் கடைகளில் வசூல் வேட்டை தொடர்கிறது. டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு தற்போதும் கூடுதல் தொகை வசூலிக்கின்றனர். ஆதி திராவிடர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கைவைப்பது எந்த விதத்தில் நியாயம்? மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்காக போக்குவரத்து விதிமீறலுக்கு தினமும் ரூ.25 கோடி அபராதம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளனர்.

தமிழக அமைச்சரவையில் இன்னும் அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்கிறார். அவர் தற்போது சிறையில் இருக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒரு முடிவு எடுக்கப்பட்டால் கையெழுத்திட அந்த ரகசிய கோப்புகள் அமைச்சர்களுக்கு அனுப்பப்படும். இந்த நோட் மிக மிக ரகசியமானது. பி.ஏ, வீட்டில் இருப்பவர்கள் என யாரும் திறந்து பார்க்க முடியாது.

இப்போது அந்த ரகசிய கோப்புகள் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அதனை சிறைத்துறை விதிப்படி அங்குள்ள அதிகாரிகள் பிரித்து படித்து பார்த்துத்தான் கைதிகளுக்கு கொடுக்க வேண்டும். இதனால் அமைச்சராக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியால் விதிமுறைகள் மீறப்படுகிறது. இதை வைத்தே சட்டவிதி 356-இன்படி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார் ஜெயக்குமார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal