‘மணிப்பூரில் பெண்கள் மற்றும் மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியிருக்கிறது. அம்மாநில மக்கள் எதிகாலத்தை நினைத்து மிகுந்த வருத்தத்தில் உள்ளார்கள்’ என கனிமொழி எம்.பி. தெரிவித்திருக்கிறார்.

மணிப்பூர் கள நிலவரத்தை ஆய்வு செய்யும் எதிர்க்கட்சிகளின் குழுவில் இடம்பெற்றுள்ள திமுக எம்பி கனிமொழி அங்குள்ள நிலவரம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதாவது,

“மணிப்பூரில் இன்னும் அமைதி திரும்பவில்லை. அரசு மீது மக்களுக்கு எந்தவித நம்பிக்கையும் இல்லை. முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உணவு, மருத்துவ வசதி, குழந்தைகளுக்கு பால் என அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு நிலையில் கிட்டத்தட்ட இரண்டு மூன்று மாதங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அங்குள்ள மக்கள் எதிர்காலம் குறித்த மிகுந்த கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

மிக மோசமான ஒரு சூழல்தான் இருந்து கொண்டிருக்கிறது. ‘எங்களை பாதுகாக்க அரசு எதுவுமே செய்யவில்லை’ என எங்கு போனாலும் மக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத சூழல் இருக்கிறது. அதையும் அரசு கண்டுகொண்டதாக தெரியவில்லை.

மேலும் மாணவர்கள் எதிர்காலம் குறித்தும், அங்குள்ள மக்களின் எதிர்காலம் குறித்தும் மிகவும் கவலைப்பட்டுள்ளனர். மத்திய அரசும், பா.ஜ.க. ஆளும் மாநில அரசும் கண்டுகொள்ளவே இல்லை. மேலும், இப்பிரச்னைகளுக்கு முழுமையாக பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகவேண்டும். இப்பிரச்னை குறித்து ஒன்றிய பிரதமர் நாடாளுமன்றத்தில் ஒரு விளக்கம் அளிக்க மறுப்பவது வருத்தத்திற்குரிய விஷயம். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தியே தீரவேண்டும்” என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal