சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அண்மையில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தினார். இந்த நிலையில், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா திடீரென மேற்கொண்டு அதிரடி காட்டியுள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூருக்கு அதிகளவில் பேருந்துகள் இயக்கப்படுவதால் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, கடந்த அதிமுக ஆட்சியில் 2019ஆம் ஆண்டு புறநகரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்மூலம் சென்னையின் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனையடுத்து, வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் பிரமாண்டமாக பேருந்து முனையம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. கொரோனா காலமாக தாமதம் ஏற்பட்டதை அடுத்து, தற்போது திமுக ஆட்சியில் இதற்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன. புதிய பேருந்து முனையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக, கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து முனையம் என பெயர் சூட்டப்பட்டது.

இந்த நிலையில், கடந்த மாதமே (ஜூன்) பேருந்து முனையத்தை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதற்காக சிஎம்டிஏ அதிகாரிகள் தரப்பில் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. எதிர்பாராத விதமாக கடைசி நேரத்தில் மழைநீர் தேங்கும் பிரச்சினை எழுந்தது. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் மழைநீர் தேங்காமல் தடுக்க தற்போது ஜிஎஸ்டி சாலையில் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

இதற்கிடையே, அய்யஞ்சேரியில் நடைபெற்று வரும் சாலை பணிகள் தொடர்பாகவும் கிளாம்பாக்கத்தில் காவல் நிலையம் அமைப்பது தொடர்பாகவும் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இதனை அடுத்து, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் சென்று அங்குள்ள பணிகள் அதிரடியாக பார்வையிட்டார். இரவு நேரத்தில் சென்ற அவர், இருள் அதிகளவில் இருப்பதால், பேருந்து முனைய வளாகத்தில் மின் விளக்குகளை அதிகப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, கூடுதல் மின்விளக்குகள் அமைக்கும் பணி விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேருந்து முனையத்தில் இருந்து வெளியூர் பேருந்து செல்வதற்காக அய்யஞ்சேரி சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு சிஎம்டிஏ அதிகாரிகள் கண்காணிப்பில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். திறப்பு விழாவுக்கு தயாராகும் பேருந்து முனையத்தின் நிலை குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். 90 சதவீதத்திற்கு மேல் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்திருக்கும் நிலையில், மீதமுள்ள பணிகளின் தற்போதைய நிலவரம் தொடர்பாக விவரங்களை அவர் தெரிந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை வாசிகளுக்கு நல்ல செய்தியாக அடுத்த மாதமே கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறக்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இணைப்பு வசதிகளை முறையாக ஏற்படுத்திக் கொடுத்தால் எந்தவித பிரச்சினையும் இன்றி கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு செல்ல ஏதுவாக இருக்கும் என்பதே அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal