தக்காளி கிலோவுக்கு ரூ.200 வரை விற்பனையாகும் நிலையில், விலையை கட்டுப்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் பெரிய கருப்பன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் வரை ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்ற நிலை மாறி தற்போது 200 ரூபாயை தொட்டுள்ளது. இதன் காரணமாக சமையலில் தக்காளி இல்லாமல் சமைக்க இல்லத்தரசிகள் மாறி வருகின்றனர். மேலும் ஓட்டல்களில் தக்காளி சாதம், தக்காளி சட்னியையும் விநியோகம் செய்வதை நிறுத்தியுள்ளனர். கிலோ கணக்கில் தக்காளி வாங்கிய நிலையில் தற்போது எண்ணிக்கையில் தக்காளி வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.

இந்தநிலையில் தக்காளி வரத்து இன்றும் கோயம்பேடு சந்தைக்கு குறைவான அளவே வந்த காரணத்தால் தக்காளி விலை இன்றும் அதிகரித்துள்ளது. அதன் படி கோயம்பேடு மார்க்கெட்டில் 180 ரூபாய் வரை தக்காளி விற்கப்படுகிறது. வெளி சந்தையில் 200 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

தக்காளி விலை அதிகரிப்பால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். அதிகாரிகளோடு ஆலோசனை மேற்கொள்ளும் அவர், தக்காளியை பதுக்கி வைத்து விநியோகம் செய்வதை தடுப்பது தொடர்பாகவும், குறைந்த விலையில் பொதுமக்களுக்கு தக்காளி கிடைக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்க உள்ளார்.

தலைமை செயலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது ஏற்கனவே நியாயவிலைகடைகளில் தக்காளியை குறைந்த விலையில் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது பண்ணை பசுமை மையங்கள் மூமாகவும், நியாய விலைக்கடைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாகவும் முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அமைச்சர்கள் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை என அடுத்தடுத்து சோதனை நடத்தி தமிழக அரசுக்கு சிக்கல் கொடுத்து வரும் நிலையில், மறுபக்கம் ‘தக்காளி’ படுத்தும் பாடு இருக்கே…. சொல்ல முடியலை..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal