பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தை தொடங்கி வைத்து பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறுகையில், சோனியாவுக்கு ராகுலை பிரதமர் ஆக்க வேண்டும். மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதியை முதலமைச்சர் ஆக்க வேண்டும். லாலு பிரசாத்துக்கு தேஜஸ்வியையும், மம்தா பானர்ஜிக்கு அவருடைய மருமகனையும், மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரேவுக்கு அவருடைய மகனையும் முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்பதே கொள்கை என்று கூறினார். இந்நிலையில் தி.மு.க. இளைஞர் அணி மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தி.மு.க.வை குடும்ப ஆட்சி என்கிறார் அமித்ஷா. பா.ஜனதாவில் எத்தனை பேர் வாரிசுகள்? நான் பட்டியல் போடட்டுமா? அமித்ஷாவுக்கு இப்போது திடீரென்று மீனவர்கள் மீது திடீர் பாசம் எப்படி வந்தது? மோடி ஆட்சிக்கு வந்த பிறகு மீனவர்கள் மீது எத்தனை தாக்குதல்கள்? செந்தில்பாலாஜி பற்றி கேள்வி கேட்கிறீர்கள். குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட பலர் மந்திரிகளாக இருக்கிறார்களே இதுபற்றி மோடியிடமும் அமித்ஷாவிடமும் கேட்க முடியுமா? என்னால் செந்தில்பாலாஜி வழக்கு பற்றி பேச முடியும். ஆனால் கோர்ட்டில் வழக்கு இருக்கிறது. அமலாக்கத்துறையை வைத்து எதிர்க்கட்சிகளை மிரட்டி வருகிறார்கள். உங்கள் ஆட்டமெல்லாம் விரைவில் முடிய போகிறது. இந்தியாவை காப்பாற்ற இந்திய அணிக்கு வாக்களியுங்கள் என்று கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal