இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த மே மாதம் 4-ந் தேதி கலவரத்தின்போது பழங்குடியினப் பெண்கள் 2 பேர் வன்முறை கும்பலால் நிர்வாணப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். மணிப்பூர் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும், அம்மாநிலத்தின் தற்போதைய நிலைமை குறித்து பிரதமர் பதில்அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சி சார்பாக பா.ஜ.க. அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கான தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்டு உருக்குலைந்து இருக்கும் மணிப்பூர் மாநிலத்தின் கள நிலவரம் குறித்தும், பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்தும் அறிய காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணியைச் சேர்ந்த 21 எம்.பி.க்கள் கொண்ட குழு நேரில் சென்று இன்றும் நாளையும் ஆய்வு செய்ய உள்ளது.

மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவர் ஆதிர்ரஞ்சன், துணைத்தலைவர் கவுரவ் கோகாய் தலைமையிலான இந்த குழுவில் கூட்டணியின் முதன்மை கட்சிகளில் ஒன்றான தி.மு.க. சார்பாக அந்த கட்சியின் துணை பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழி இடம்பெற்று உள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal