பிரபல சீரியல் நடிகையுடன் உல்லாசமாக இருந்த முதியவர் ரூ.11 லட்சத்தை இழந்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்த இந்த காலத்தில் மோசடிகளும் விதவிதமாக நடக்க தொடங்கிவிட்டன. மோசடி கும்பல் மக்களின் மனநிலையை புரிந்து அதற்கு தகுந்தாற்போல், பணத்தை பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. அவ்வாறு மோசடியில் ஈடுபடுவர்களிடம் வசதி படைத்தவர்கள் பலர் சிக்கி லட்சக்கணக்கில் பணத்தை இழக்கிறார்கள்.
கேரளாவில் முதியவர் ஒருவரிடம், உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி வரவழைத்து ரூ.11 லட்சம் பணத்தை பறித்துள்ளனர். இந்த நூதன மோசடியில் ஈடுபட்ட சீரியல் நடிகை தனது ஆண் நண்பருடன் கைது செய்யப்பட்டுள்ளார். அது பற்றிய விவரம் வருமாறு:- கேரள மாநிலம் திருவனந்தபுரம் பட்டம் பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரும், கேரள பல்கலைக்கழக ஊழியருமான 75 வயது முதியவர், கொல்லம் பரவூரில் உள்ள தனது வீட்டை வாடகைக்கு விட இருப்பதாக விளம்பரம் செய்திருந்தார்.
அதில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணை பார்த்து கடந்த மே மாதம் அவரிடம் ஒரு பெண் பேசியிருக்கிறார். அவர் தனக்கு வீடு வாடகைக்கு வேண்டும் என்று அந்த முதியவரிடம் கூறியிருக்கிறார். அது தொடர்பாக அந்த பெண் அடிக்கடி பேசி, அந்த முதியவருடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டார். அவ்வாறு பேசும்போது அந்த பெண், ஆசை ஏற்படும் வகையில் பேசியிருக்கிறார்.
மேலும் கொல்லம் பரவூரில் உள்ள வீட்டில் தனியாக சந்திக்க விரும்புவதாகவும், இருவரும் உல்லாசமாக இருக்கலாம் எனவும் அந்த பெண் முதியவரிடம் தெரிவித்திருக்கிறார்.
இதனால் சபலமடைந்த முதியவர், அந்தபெண்ணை தனியாக சந்திக்க சென்றிருக்கிறார். அப்போது அந்த பெண், முதியவரை நிர்வாணமாக்கி சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துள்ளார். அந்த நேத்தில் அங்கு அந்த பெண்ணின் ஆண் நண்பர் ஒருவர் வந்திருக்கிறார். அவர் முதியவரை மிரட்டி மேலும் நிர்வாண போட்டோ மற்றும் வீடியோக்களை எடுத்திருக்கிறார். பின்பு அவற்றை காட்டி ரூ.25 லட்சம் தராவிட்டால், இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். தனது நிர்வாண போட்டோ மற்றும் வீடியோ வெளியாகினால் அவமானமாகிவிடும் என்று கருதிய முதியவர் ரூ.11லட்சம் கொடுத்துள்ளார்.
அதனை வாங்கிக்கொண்ட அவர்கள், மேலும் 25 லட்சம் ரூபாய் வேண்டும் என்றும், இல்லையென்றால் நிர்வாண போட்டோ மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிடுவோம் எனக்கூறி மிரட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த முதியவர், அது பற்றி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் முதியவரிடம் நூதனமாக பணம் பறித்து மிரட்டியவர்கள் பற்றி போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தினர். அப்போது முதியவரை நிர்வாண போட்டோ மற்றும் வீடியோ எடுத்து பணம் பறித்து மிரட்டியது பத்தினம்திட்டா மாவட்டம் மலையாலப்புழா பகுதியை சேர்ந்த டி.வி. சீரியல் நடிகை நித்யா சசி மற்றும் கொல்லம் பரவூரை சேர்ந்த பினு என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை நைசாக வரவழைத்து பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். அதன்படி அந்த முதிய வரை பணம் ரெடியாகிவிட்டதாகவும், வாங்க வருமாறும் நடிகை நித்யா சசி மற்றும் பினுவிடம் தெரிவிக்க வைத்தனர். அதனைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் முதியவர் அழைத்த இடத்துக்கு வந்துள்ளனர். அப்போது சீரியல் நடிகை மற்றும் அவரது ஆண் நண்பரை போலீசார் மடக்கிபிடித்தனர்.
ஹனி டிராப் முறையில் முதியவரிடம் ரூ.11 லட்சம் பறித்தது மட்டுமன்றி, நிர்வாண வீடியோ மற்றும் புகைப்படத்தை காட்டி சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாக மிரட்டி மேலும் ரூ. 25 லட்சம் கேட்ட இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.