புதுவையை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில் பவுண்டேஷன் செயலாளர் ஜெயந்தி ரவி நிருபர்களிடம் கூறியதாவது:- ஆரோவில் சர்வதேச நகரம் 55 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. அதன் நோக்கம் வேற்றுமையில் மனித ஒற்றுமையாகும். இந்த நிலையில் ஆரோவில் நிறுவன தினத்தையொட்டியும், அரவிந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டியும் ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 8-ந்தேதி ஆரோவில்லுக்கு வருகை தருகிறார். அன்று நண்பகல் 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ரவி, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.
மேலும் அரவிந்தரின் 150-வது பிறந்த நாள் விழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி ஆரோவில் மாத்ரி மந்திரில் கூட்டு தியானமும், ஆம்பி தியேட்டரில் ‘போன்பயர்’ எனப்படும் தீ மூட்டி கூட்டு தியானமும் நடக்கிறது. அரவிந்தர் பிறந்த மாதமான ஆகஸ்டு மாதம் முழுவதும் ஆரோவில்லில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை ஒற்றுமை நடைபயணம், மரம் வளர்ப்பு குறித்து கலந்துரையாடல், 25 முதல் 27-ந் தேதி வரை அரவிந்தரின் பன்முக திறன் குறித்து சர்வதேச எழுத்தாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.