கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் சூப்பாக்கி சூடு நடத்தியதில் போராட்டக்காரர்கள் 9 பேர் உயிரிழந்தனர்! இன்றைக்கு தி.மு.க. ஆட்சியில் என்.எல்.சி. நிர்வாகம் விளைநிலங்களை ஆக்கிரமிப்பு செய்ததை கண்டித்து பா.ம.க. சார்பில் நடந்த ஆர்பாட்டத்தில் சூப்பாக்கி சூடு, கல்வீச்சு என கலவர பூமியாகிவிட்டது கடலூர்.
நெய்வேலியில் இயங்கி வரும் மத்திய அரசின் என்.எல்.சி. நிறுவனம், விளைநிலங்களை ஆக்கிரமித்து கையகப்படுத்தி வருகிறது. இது அப்பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. என்.எல்.சி. நிர்வாகத்தின் இப்போக்கை கண்டித்தும் நெய்வேலி என்.எல்.சி. தமிழ்நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தியும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று நெய்வேலியில் பிரம்மாண்ட போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பாமகவினர் பங்கேற்றனர்.
இப்போராட்டத்தைத் தொடர்ந்து நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தை அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் முற்றுகையிட முயன்றனர். ஆனால் இதனைத் தடுத்த போலீசார் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரை கைது செய்தனர். இக்கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டத்தின் போது போலீசார் வாகனங்கள் மறிக்கப்பட்டன; போலீசார் வாகனங்கள் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. பாமகவினர் நடத்திய இத்தாக்குதலில் 3 போலீசார் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனையடுத்து பாமகவினரை சம்பவ இடத்தில் இருந்து கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தினர். ஆனாலும் பாமகவினர் அந்த இடத்தை விட்டு வெளியேறாத நிலையில் முதலில் தண்ணீரை பீய்ச்சி அடித்தது போலீஸ். பின்னர் கண்ணீர்புகை குண்டுகளை வீசியது. ஒரு கட்டத்தில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தியதும் போலீஸ். இதனால் நெய்வேலி பகுதி முழுவதும் போர்க்களமானது.
ஏற்கனவே நெய்வேலியில் பதற்றம் நிலவியதால் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் வரவழைக்கப்பட்டிருந்தனர். 10 மாவட்டங்களில் இருந்து போலீசார் கடலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டனர். அத்துடன் கடலூர் மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் அன்புமணி கைதுக்கு எதிரான போராட்டம், போலீசாரின் பதில் நடவடிக்கையால் கடலூர் மாவட்டத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது. வடக்கு மண்டல ஐஜி என். கண்ணன், விழுப்புரம் டிஐஜி ஜியாவுல் ஹக் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் நெய்வேலியில் முகாமிட்டுள்ளனர்.
பாமகவினர் போராட்டம், போலீசார் தடியடியில் மொத்தம் 6 செய்தியாளர்களும் படுகாயமடைந்தனர். தற்போது போலீசார் கட்டுப்பாட்டில் நெய்வேலி வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.