பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்தார். அப்போது திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளார்.

ஏற்கெனவே கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அவர் வெளியிட்ட திமுக ஃபைல்ஸ் முதல் பாகத்தைத் தொடர்ந்து திமுக ஃபைல்ஸ் 2ஆம் பாகத்தை ஜூலை முதல் வாரத்தில் வெளியிடுவதாக அறிவித்திருந்தார். ஆனால், பல்வேறு காரணங்களால் இது தாமதம் ஆனதை அடுத்து, இன்று திமுக ஃபைல் 2வது பாகத்தை ஆளுநரிடம் அளித்துள்ளார்.

திமுக ஃபைல்ஸ் முதல் பாகத்தில் திமுக பிரமுகர்கள் 12 பேரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார். அவர்கள் பெயரில் மொத்தம் ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் கோடி சொத்து இருப்பதாக அதில் கூறியிருந்தார். தற்போது, திமுக ஃபைல்ஸ் இரண்டில் ரூ.5600 கோடி மதிப்பிலான மூன்று ஊழல்கள் குறித்த ஆவணங்களையும், ஆதாரங்களையும் வழங்கியிருக்கிறார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது:

‘‘இன்று, பாஜக மூத்த தலைவர்களுடன், நமது மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு ஆர். என். ரவி அவர்களைச் சந்தித்தோம்.

மாண்புமிகு ஆளுநர் அவர்களிடம், திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களையும், மேலும், ரூ.5600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களையும் வழங்கி, இது தொடர்பாக அவர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளோம்’’ இவ்வாறு அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் கூறியிருக்கிறார்.

இந்த மூன்று ஊழல்கள் மூன்று அமைச்சர்கள் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது! அடுத்து இந்த மூன்று அமைச்சர்கள் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை டார்கெட்டில் சிக்குவார்கள் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal