கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தாய்மையை நிர்வாணப்படுத்தித் தலைகுனிய வைத்த மணிப்பூர் கொடூரத்தை தடுக்க தவறியதாக மணிப்பூர் மாநில பா.ஜனதா அரசு மற்றும் மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கிழக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் லட்சுமிபிரியா தேவராஜன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் விஜயஸ்ரீ வரவேற்றார்.
இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி. மதியழகன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்று கண்டனவுரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளை கண்டித்தும், அதை தடுக்க தவறியதாக பா.ஜனதா அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், மாநில மகளிர் அணி பிரசார குழு செயலாளர் டாக்டர்.மாலதி நாராயணசாமி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மணிமேகலை நாகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் சாவித்திரி கடலரசுமூர்த்தி, புஷ்பா சர்வேஷ், கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப் உள்ளிட்டோர் பேசினார்கள்.
இதில் மாவட்ட அவைத்தலைவர்கள் தட்ரஅள்ளி நாகராஜ், யுவராஜ், கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப், ஓசூர் மாநகராட்சி சுகாதார குழுத் தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சந்திரன், சின்னசாமி, மாவட்ட பொருளாளர்கள் கதிரவன்,சுகுமார், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், மற்றும் ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அணிகளின், அமைப்பாளர்கள், தொண்டர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள் புஷ்பா, சாலம்மா ஆகியோர் நன்றி கூறினார்கள்.