செந்தில் பாலாஜி வழக்கில், ‘எனது உத்தரவின் நான் உறுதியாக இருக்கிறேன். ஆட்கொணர்வு மனுவை உச்சநீதிமன்றமே பார்த்துக்கொள்ளட்டும்’ என நீதிபதி நிஷா பானு அதிரடியாக அறிவித்திருக்கிறார்.
சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோரைக் கொண்ட இரு நீதிபதிகள் அமர்வு, மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது. இதனால் வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட 3வது நீதிபதி கடந்த வாரம் தீர்ப்பு அளித்தார். அதில் கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். தான் குற்றம் செய்யவில்லை என்பதை செந்தில் பாலாஜி விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். செந்தில் பாலாஜி சட்டத்துக்கு உட்பட்டவர் தான். கைது செய்யப்பட்டவர்களை விசாரணை அதிகாரிகள் விசாரணை காவலில் எடுக்க வேண்டியது அவசியம் என 3வது நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலும், இரு நீதிபதிகள் அமர்வில், நீதிபதி பரத சக்கரவர்த்தி அளித்த தீர்ப்புடன் தான் உடன்படுவதாக உறுதி செய்தார் மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன். அமலாக்கதுறை சட்ட விதிகளின் படி தான் கைது செய்துள்ளது என்றும், செந்தில்பாலாஜியின் சிகிச்சை நாட்களை காவல் நாட்களாக எடுத்துக்கொள்ள முடியாது. செந்தில்பாலாஜியின் சிகிச்சை முடிந்ததும் அவரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்றும் 3வது நீதிபதி உத்தரவிட்டார்.
அதேசமயம், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை எப்போது முதல் காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்பது குறித்து முடிவெடுக்க, இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்குப் பட்டியலிட தலைமை நீதிபதிக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் பரிந்துரை செய்திருந்தார். அதன்படி, அமலாக்கத்துறை காவலை முடிவெடுப்பது குறித்து இன்று 2 நீதிபதிகள் அமர்வில் விசாரணை நடைபெற்றது.
ஐகோர்ட் மதுரை கிளையில் இருந்தபடி, நீதிபதி பரத சக்கரவர்த்தி காணொளிக் காட்சி வாயிலாக இந்த விசாரணையில் பங்கேற்றார். செந்தில்பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதங்களை வைத்தனர்.
அப்போது குறுக்கிட்டு, ‘‘செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுக்க அதிகாரம் இல்லை என்ற எனது தீர்ப்பில் உறுதியாக உள்ளேன், இதற்கு மேல் வழக்கில் சொல்வதற்கு எதுவும் இல்லை’’ என திட்டவட்டமாகத் தெரிவித்தார் நீதிபதி நிஷா பானு. ‘‘செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கட்டும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது உயர் நீதிமன்றம் எப்படி முடிவெடுக்க முடியும்? அனைத்து அம்சங்கள் குறித்தும் முடிவெடுக்கும்போது இந்த வழக்கை ஏன் நிலுவையில் வைக்க வேண்டும்? சுப்ரீம் கோர்ட்டே இந்த மனு மீதும் முடிவெடுக்கட்டும்’’ எனக் கூறி ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்து நீதிபதி நிஷா பானு உத்தரவிட்டார்.
செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுப்பது குறித்து உயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்காததால் அமலாக்கத்துறைக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அமலாக்கத்துறை, உச்ச நீதிமன்ற உத்தரவு வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்ட்டுள்ளது.