தக்காளி விலை கடந்த ஒரு மாதமாக உச்சத்தில் இருந்து வருகிறது. கிலோ ரூ.130 வரை விற்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தக்காளி விலையை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து ரேசன் கடைகளிலும் கிலோ ரூ.60-க்கு விற்கப்படுகிறது. இந்த நிலையில் தக்காளியின் விலை கடந்த சில நாட்களாக சற்று குறைய தொடங்கியது. வெளிமார்க்கெட்டில் ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டது. மேலும் கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று கிலோவுக்கு ரூ.10 குறைந்து ரூ.80க்கு விற்பனை ஆனது. இதனால் வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் குறையும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து மேலும் குறைந்தது. ஏற்கனவே வழக்கமான நாட்களை விட 50 சதவீத தக்காளி லோடுகளே வரும் நிலையில் இன்று 34 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்தது. இதன் காரணமாக தக்காளி விலை மீண்டும் சற்று அதிகரித்து சதம் அடித்து உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டிலேயே இன்று காலை தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை ஆனது வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் மீண்டும் தக்காளி விலை உயர்ந்து ரூ.120 வரை விற்கப்படுகிறது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து அதிக அளவில் தக்காளி விற்பனைக்கு வரும். இன்று காலை கோயம்பேடு சந்தைக்கு 34 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்திருந்தது. ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தற்போது மீண்டும் மழையால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வரத்து குறைந்து விட்டது. வரும் நாட்களில் தக்காளி விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது. இந்த விலை உயர்வு மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal