தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் யாத்திரை துவக்கவிழாவில் அமித்ஷா பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமி, ஜி.கே.வாசன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஓ.பி.எஸ்.ஸுக்கு கல்தா கொடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வருகிற 28-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்கிறார். ராமேசுவரத்தில் தொடங்கும் இந்த யாத்திரை 5 கட்டங்களாக நடைபெறுகிறது. ஜனவரி 11-ந்தேதி சென்னையில் முடிவடைகிறது. இந்த யாத்திரை தொடக்க விழாவில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்து கொள்கிறார்.

பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்தே பா.ஜனதா இந்த யாத்திரையை மேற்கொள்கிறது. திராவிட மாடல் என்பதை திராவிட மாயை என்று மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. எனவே அமித்ஷா பங்கேற்கும் தொடக்கவிழா கூட்டத்தையே தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசார கூட்டமாகவும் நடத்த வியூகம் அமைக்கப்பட்டு உள்ளது. எனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இந்த கூட்டத்தில் பங்கேற்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், இந்திய ஜனநாயக கல்வி உரிமை கழக தலைவர் தேவநாதன் யாதவ், ஐ.ஜே.கே. கட்சி தலைவர் பாரிவேந்தர் ஆகியோர் பங்கேற்கிறார்கள். கடந்த முறை பா.ஜனதா கூட்டணியில் இருந்த பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறுவது பற்றி இன்னும் அறிவிக்கவில்லை.

எனவே அந்த கட்சிகளையும் சேர்ப்பதற்கான முயற்சிகளும் நடந்து வருகிறது. அழைப்பு வந்தால் பரிசீலிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal