நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார்.

இதற்காக கடந்த மார்ச் மாதம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். தி.மு.க.வில் 1 கோடி உறுப்பினர்கள் உள்ள நிலையில் மேலும் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்த்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு புதிய உறுப்பினர்களை சேர்த்து முழுமையாக பூத் கமிட்டியை அமைக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

அதன்படி தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களை சேர்த்து வந்தனர். ஜூன் 3-ந் தேதிக்குள் மேலும் 1 கோடி உறுப்பினர்களை சேர்த்துவிட்டனர். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வில் 2 கோடி உறுப்பினர்கள், 23 சார்பு அணிகள், 125 சட்டமன்ற உறுப்பினர்கள், 20 மக்களவை உறுப்பினர்கள், 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் இருப்பதாகவும் இணைய தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை (பி.எல்.ஏ.2) தி.மு.க. நியமித்து வந்தது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 65 ஆயிரம் வாக்குச்சாவடிக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களின் பெயர், முகவரி, செல்போன் எண்கள், அவரது புகைப்படம் ஆகிய முழு விவரங்களையும் தயாரித்து அண்ணா அறிவாலயத்தில் மாவட்டச் செயலாளர்கள் சமர்ப்பித்திருந்தனர். இந்த பட்டியல் அனைத்தும் தலைமைக் கழகத்தால் முழுமையாக சரிபார்க்கப்பட்டது.

இதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி பார்வையாளர்கள் சென்று வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பெயர் விவரங்களை சரி பார்த்தனர். இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி சரி பார்க்கப்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு மாநிலம் முழுக்க பயிற்சி பாசறை கூட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டது. இதற்காக 5 மண்டலங்களாக பிரித்து வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் கூட்டத்தை நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி முதன் முதலில் டெல்டா மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (பி.எல்.ஏ.2) பயிற்சி பாசறைக் கூட்டம் நாளை (26-ந் தேதி) காலை திருச்சி கருமண்டபம் ராம்ஜி நகரில் நடைபெறுகிறது.

இதில் திருச்சி அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 15 கழக மாவட்டங்களின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் மொத்தம் 12 ஆயிரத்து 645 பேர் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பாராளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து பேசுகிறார். தேர்தல் பணியை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்குகிறார். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை விமானம் மூலம் திருச்சி செல்கிறார்.

திருச்சியில் நாளை முழுவதும் இருக்கும் அவர் பாராளுமன்ற தேர்தல் பணியை தொடங்கி வைப்பது மட்டுமின்றி கட்சியின் மூத்த நிர்வாகிகளுடனும் ஆலோசனை மேற்கொள்கிறார். பாராளுமன்ற தேர்தலில் எந்தெந்த தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும், தி.மு.க. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் கடந்த முறை போட்டியிட்ட காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கூட்டணி கட்சிகள்தான் இந்த தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இதில் புதிய கட்சிகள் இடம் பெற வாய்ப்பு இல்லை என்பதால் இருக்கிற கட்சிகளுக்கு அதே தொகுதியை ஒதுக்கலாமா? அல்லது புதிய தொகுதிகளை வழங்கலாமா? என்பது பற்றியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசிப்பார் என தெரிகிறது. பாரதிய ஜனதாவுக்கு எதிராக அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து பாராளுமன்ற தேர்தலில் முக்கிய பங்காற்றி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு-புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் கைப்பற்றி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார்.

நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை திருச்சியில் தொடங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திருப்பம் தருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal