ஆந்திரா அருகே மத்திய மேற்கு அதனையொட்டிய வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்றிரவு உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இது ஆந்திர பிரதேசம்-தெற்கு ஒடிசா கடற்கரை பகுதியை நோக்கி மெதுவாக நகர்கிறது.

இது நாளை (புதன்) அல்லது வியாழக்கிழமை வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா பகுதியில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக காற்று மாறுபாடு ஏற்பட்டு தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டுடன் வட மாவட்டங்களில் 2 நாட்கள் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 14 மாவட்டங்களில் பகலில் லேசான மழை பெய்யும். மாலையில் இருந்து வட மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக சென்னையை ஒட்டிய காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. சில நேரங்களில் இடி மின்னலுடன் மழை கொட் டும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இரவில் பரவலாக மழை பெய்தது. காலையில் மேகமூட்டத்துடன் சிறு சிறு தூறல்களாக பெய்து வருகின்றன. அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal