நாடாளுமன்றத் தேர்தலுக்கும் இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், எந்தக் கட்சியுடன் கூட்டணி, யாருக்கு சீட்டு, யாருக்கு வேட்டு என்று தி.மு.க. கணக்குப் போட்டுவிட்டது. அ.தி.மு.க. கணக்குப் போட்டு வருகிறது.

இது பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. இதனால் தேசிய கட்சிகள் தயாராகி வருகின்றன.. அந்த வகையில், தமிழகத்திலும் தேர்தல் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதில் திமுகவை பொறுத்தவரை, மிகப்பெரிய கூட்டணியாக திகழ்ந்து வருகிறது.. ஆனால், வரும் தேர்தலில், மெகா கூட்டணியாக திமுக போட்டியிடும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில், திமுகவில் மேலும் சில கட்சிகள் இணையலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், தேமுதிக, மநீம போன்ற கட்சிகள் திமுகவுக்குள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. தே.மு.தி.க.விற்கு ஒரு சீட் கொடுக்கலாம் என்று தி.மு.க. தலைமை முடிவு செய்திருக்கிறது. தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் போட்டியிட அதிக வாய்ப்பிருக்கிறது. இவருக்கு தி.மு.க. சார்பில் கள்ளக்குறிச்சி தொகுதி ஒதுக்க அதிக வாய்ப்பிருக்கிறது. அதே போல் மக்கள் நீதி மய்யத்திற்கும் கோவை தொகுதியை ஒதுக்கீடு செய்ய தி.மு.க. முடிவு செய்து விட்டது.

அதேசமயம், வரப்போகும் தேர்தலில், பெரும்பான்மையான இடங்களை தன் கையில் வைத்து கொண்டு போட்டியிடவே திமுக நினைக்கிறது. மேலும், ஒரே தொகுதியை ஒரே கட்சிக்கு, பல வருடங்களாகவே ஒதுக்கி தருவதால், அந்த பகுதிகளில் கட்சி வளர்ச்சியும், கட்சியினர் முன்னேற்றமும் பாதிக்கப்படுதாக திமுக தலைமை கருதுவதாக தெரிகிறது. எனவேதான், வரும் தேர்தலில், கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகளை, மறுபடியும் அந்த கட்சிகளுக்கு ஒதுக்கக் கூடாது என்பதில், ஆளும் தரப்பு உறுதியாக உள்ளதாம்.

குறிப்பாக, காங்கிரஸ் கட்சிக்கு இப்போதைக்கு 8 எம்பிக்கள் இருக்கிறார்கள். அவர்களில் பலர், தொடர்ந்து ஒரே தொகுதியில் போட்டியிட்டும் வருகிறார்கள். இவர்களில் சிலர் அதிமுக அனுதாபிகளாக இருப்பதாக தெரிகிறது. அதனால், குறிப்பிட்ட அந்த எம்பிக்கள் மட்டும், மறுபடியும் வெற்றி பெறுவதை, திமுக விரும்பவில்லை போலும். எனவே, இந்த முறை அவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், தொகுதிகளை மாற்றித் தர திட்டமிட்டுள்ளதாம்.

அதற்கு பதிலாக, திமுகவுக்கு விசுவாசிகளாக இருப்போருக்கு வாய்ப்பு தரப்படலாம் என்கிறார்கள். முக்கியமாக, உதயநிதியின் இளைஞர் அணியில், சிறந்து பணியாற்றக்கூடியவர்களுக்கு எம்பி சீட் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதாவது எம்.எல்.ஏ. சீட், மேயர் சீட் என்று எதிர்பார்த்து சீட் கிடைக்காமலும் கட்சிக்காக, உதயநிதியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் தூத்துக்குடி ஜோயல் போன்றவர்களுக்கு சீட் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்!

அதே போல், திருவள்ளூர் தொகுதி, எம்பி, ஜெயகுமாருக்கும் சிக்கல் உள்ளதாக தெரிகிறது. காரணம், அந்த தொகுதியைத்தான் திருமாவளவன் கேட்டிருப்பதாக சொல்கிறார்கள். எனவே, திருவள்ளுவருக்கு பதிலாக, காஞ்சிபுரத்தை காங்கிரசுக்கு திமுக ஒதுக்கக்கூடும்.

திருச்சியில் தன் மகனை களமிறக்க கே.என்.நேரு முயன்றுவருவதால், திருநாவுக்கரசுவுக்கும் போட்டியிடுவதில் சிக்கல் வரக்கூடுமாம். முதலில் பெரம்பலூர் தொகுயில் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுவதாக இருந்தது. ஆனால், இங்கு பா.ஜ.க. சார்பில் பாரிவேந்தர் போட்டியிடுவதால், திருச்சியை கே.என்.நேரு குறி வைத்திருக்கிறார்’’ என்றனர்.

ஆக மொத்தத்தில் தி.மு.க. யார் யாருக்கு எந்தத் தொகுதி என்கிற ரீதியில் கூட முடிவு செய்துவிட்டது என்கிறார்கள் தலைமைக்கு நெருக்கமானவர்கள். ஆனால், அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி எத்தனை சீட் என்பது இன்னும் முடிவாகவில்லை. அதே சமயம், ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் ஆகியோர் எடப்பாடிக்கு எதிராக வாள் சுழற்றி வருவதால், எடப்பாடி தரப்பு கொஞ்சம் தடுமாறிக் கொண்டுதான் இருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal