தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி, கட்சியின் வளர்ச்சி பணிகள், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது:- தே.மு.தி.க. இந்த நிமிடம் வரை யாருடனும் கூட்டணியில் இல்லை. கூட்டணி இல்லாததால் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்துக்கு எங்களுக்கு அழைப்பு இல்லை. பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் தே.மு.தி.க. நிலைப்பாட்டை விஜயகாந்த் அறிவிப்பார். ஜெயலலிதா இருந்த போது அ.தி.மு.க. பாராளுமன்ற தேர்தலில் 40 இடங்களை பெற்றது. தி.மு.க. 38 இடங்களை பெற்றது.
இத்தனை எம்.பி.க்கள் பெற்ற தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தமிழகத்துக்கு என்ன செய்தது என்பதுதான் தே.மு.தி.க.வின் கேள்வி. தமிழ்நாட்டுக்கு தேவையான திட்டங்களை இரண்டு கட்சிகளும் செய்து தரவில்லை. காட்சிகளும் ஆட்சிகளும் தான் மாறுகிறது. மக்களின் நிலைமை மாறவில்லை. விலைவாசி உயர்வு மக்களை வாட்டி வதைக்கிறது. தி.மு.க. தேர்தலுக்கு முன்பு ஒரு நிலைப்பாடு தேர்தலுக்கு பிறகு ஒரு நிலைப்பாட்டில் உள்ளது. மணிப்பூர் சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே தலைகுனிவு என்றார்.
இதனிடையே, விஜய்காந்த் அரசியலுக்கு வரும் முன்பு மாணவ மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அளித்தார். அதுபோல் விஜய்யும் தற்போது மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்டங்களை வழங்குகிறார். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன என்று நிருபர்கள் பிரேமலதாவிடம் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது;- விஜயகாந்த் போல் யாரும் வர முடியாது. அவருடன் யாரையும் ஒப்பிட முடியாது. மக்களுக்கு அவரைப் போல் யாரும் சேவை செய்ய முடியாது.விஜய் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியதை வரவேற்கிறேன். அரசியல் வேறு, சினிமா வேறு… விஜயகாந்தைப் போல் விஜய் வர முடியாது. கேப்டன் மாதிரி என்று நினைத்தால் அதன் விளைவுகள் மோசமானதாக இருக்கும். அரசியலுக்கு வருவரா இல்லையா என்பது விஜய் தான் தெளிவுபடுத்தணும் என்று கூறினார்.
முன்னதாக தே.மு.தி.க. மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- விஜயகாந்த் பிறந்த நாளான ஆகஸ்டு 25-ம் நாள் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடும் வகையில், செப்டம்பர் 14-ம் நாள் துவக்க விழாவை எங்கும் கொண்டாடும் வகையிலும் கொடியேற்றி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், வழங்கியும், மக்களின் நல் வாழ்விற்காக நலத்திட்ட உதவிகள் வழங்கியும் தே.மு.தி.க. நிர்வாகிகளும், தொண்டர்களும், முழுமையாக உழைத்திட வேண்டும்.
மணிப்பூர் மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து தவறு செய்தவர்களை கண்டறிந்து, கைது செய்து உரியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். கர்நாடகாவில் இருந்து நமக்கு வரவேண்டிய 26.32 டி.எம்.சி. தண்ணீர் பெற்றுத் தராததால் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் 5 லட்சம் ஏக்கர் பயிர் காய்ந்து விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக மாநில அரசு இந்த பிரச்சினையில் தீர்வுக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுபடுத்தி, ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருச்சி மாவட்டம் துறையூர், கரூர், வேலூர் ஆகிய இடங்களில் நடக்கின்ற கனிமவள கொள்ளைகளை தடுக்க மத்திய அரசு தலையிட்டு மாநில அரசை உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கொள்ளைகளை தடுத்திட வேண்டும். அறிவியல் கலை கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் ஊக்கத் தொகை மற்றும் சலுகைகளை வழங்கி ஏழை, எளிய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு உதவி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்னது போல தி.மு.க. அரசு அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.