நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆளுங்கட்சியான தி.மு.க. தயாராகி வருகிறது. அதற்காக இளைஞரணிக் கூட்டத்தை கூட்டியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அதே போல், கட்சியைப் பலப்படுத்தும் வகையில் மாவட்டச் செயலாளர் மாற்றமும் விரைவில் நடக்க இருக்கிறது.
தி.மு.க.வைப் பொறுத்தவகையில் அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளன. இதில் தற்போது 15 மாவட்டச் செயலாளர்களை மாற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்திருக்கிறார். அமைச்சர், மாவட்டச் செயலாளர் என இரண்டு பதவிகள் வைத்திருப்பவர்களிடம் மா.செ. பதவியை பறிக்க இருக்கிறாராம்.
மேலும் 72 மாவட்டங்களை ஐந்து மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு பொறுப்பு அமைச்சரை நியமிக்க இருக்கிறாராம். மேலும், சில மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகள் கட்சித் தலைமைக்கு பிடிக்கவில்லையாம்.
இது பற்றி உளவுத்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, ‘‘சார், தி.மு.க.வைப் பொறுத்தவகையில் ஒரு மாவட்டத்திற்கு ஆட்சியருக்கு உள்ள ‘பவர்’ மாவட்டச் செயலாளருக்கு இருக்கும். முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு மாவட்டச் செயலாளர்கள் எந்தவொரும் தவறிலும் ஈடுபட்டுவிடக்கூடாது என ‘கடிவாளம்’ போட்டு வைத்திருந்தார்.
ஒரு சில மாவட்டச் செயலாளர்கள் அமைச்சர் பதவி இல்லாவிட்டாலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால், ஒரு சில மாவட்டங்களில் மா.செ.க்களின் செயல்பாடுகள் முதல்வருக்கு திருப்தியளிக்கவில்லை.
குறிப்பாக சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், ஈரோடு, தேனி உள்பட 15 மாவட்டச் செயலாளர்களை மாற்ற முதல்வர் முடிவெடுத்திருக்கிறார். ஈரோடு மாட்டச் செயலாளர்கள் மீது சொந்தக் கட்சியினரே அதிக அதிருப்தியில் இருப்பதாக தலைமைக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் உள்ளது.
அதே போல், சென்னை, திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் கோஷ்டிப் பூசல் தலைவிரித்தாடுகிறது. இவற்றையெல்லாம் கணக்குப் போட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறாராம். இந்த அதிரடி சில சீனியர்களுக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இந்த மாற்றம் இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டத்திற்கு முன்பு அல்லது பின்பு உறுதியாக இருக்கும்’’ என்றனர்.