வருகிற ஜூலை 29ஆம் தேதி திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடக்கவுள்ளது என அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

தி.மு.க இளைஞர் அணி 20-ஜூலை-1980ஆம் ஆண்டு இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினை அமைப்பாளராகக் கொண்டு தொடங்கப்பட்டது. திமுக இளைஞரணி தொடங்கப்பட்டு 44வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில், திமுக இளைஞரணிக்கு அண்மையில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட – மாநில – மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அறிமுகக் கூட்டம், வரும் ஜூலை 29ஆம் தேதி காலை 9 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று இளைஞரணி நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்புரை ஆற்ற உள்ளார்.

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டை சிறப்பான முறையில் கொண்டாடுவது, ஒன்றிய – நகர – பகுதி – பேரூர் நிர்வாகிகளை நியமிப்பது, உறுப்பினர் சேர்க்கை, பயிற்சிப் பாசறை உள்ளிட்ட இளைஞரணி மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வமான பணிகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதால் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

திமுக இளைஞரணி 44-ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இளைஞரணிச் செயலாளர் உதயநிதிக்கும், புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளுக்கும் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

திமுகவின் எழுச்சிக்கும் உணர்ச்சிக்கும் வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் தோன்றிய காலம் முதல் உறுதுணையாக இருந்து வருவது இளைஞரணி. அதே பங்களிப்பை வருங்காலங்களிலும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் முதல்வர் ஸ்டாலின். இந்தியாவைக் காக்கும் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இளைஞரணியினரின் பங்களிப்பை நான் அதிகம் எதிர்பார்க்கிறேன். திமுக அரசின் ஈராண்டு சாதனைகளை மக்கள் மனதில் பதியும் வகையில் பரப்புரை செய்வீர்கள் என்பதில் சந்தேகமில்லை. அதேநேரத்தில் தேர்தல் பணி என்பது திட்டமிட்டுச் செய்ய வேண்டியது.

அந்த தேர்தல் பணிகளை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை இளைஞரணிப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் அனைவர்க்கும் கற்றுத்தர வேண்டும். இதற்கான பயிற்சியை மாநாடு கூட்டி அனைத்து இளைஞரணிப் பொறுப்பாளர்களுக்கும் வழங்குமாறு இளைஞரணிச் செயலாளரைக் கேட்டுக் கொள்கிறேன் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal