கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. சாதனைக்குரிய வெற்றியை பெற்றுவிட விடல்லை. அதே சமயம் அ.தி.மு.க. கடும் சரிவுக்குரிய தோல்வியை சந்திக்கவும் இல்லை என்பதுதான் நிதர்சனம்.

அ.தி.மு.க.வைப் பொறுத்தவகையில் டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோர் வாக்குகளைப் பிரிக்காமல் இருந்திருந்தால் தி.மு.க. ஆட்சியைப் பிடித்திருக்குமா என்பது சந்தேகமே..!

இந்த நிலையில்தான் இந்தியாவின் இருபெரும் தேசிய கட்சிகளாக பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் தமிழக தலைவர்களான முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை அதிகமாக நம்புவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

இந்த நி¬யில்தான், அதிமுகவின் பொதுச்செயலாளராக தாமே நீடிப்பதாக சசிகலா தொடர்ந்த வழக்கு இன்னமும் முடிவுக்கு வரவில்லை. இதனால் அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா அவ்வப்போது அரசியல் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் திடீரென 2 நாட்கள் அரசியல் பயணம் மேற்கொண்டுள்ளார் சசிகலா.

ஈரோடு மாவட்டம் கவுந்தபாடிக்கு நேற்று இரவு வருகை தந்த சசிகலாவுக்கு முன்னாள் ராணுவ வீரர் செங்கோட்டையன் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு கொடுத்தனர். அப்போது பேசிய சசிகலா,

‘‘மேற்கு மாவட்ட மக்கள், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலங்களில் அதிமுகவுக்கு ஆதரவு தந்தனர். இப்போதும் ஆதரவாகவே இருக்கின்றனர். இதனால்தான் இந்த மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என ஒருவரிடம் முதல்வர் பதவியை கொடுத்தோம். ஆனால் அவர் என்ன செய்தார் என்பதை நீங்கள் அனைவருமே அறிவீர்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் திமுக அரசு நிறுத்தி விட்டது.

அம்மா உணவகங்கள், தாலிக்கு தங்கம் போன்ற திட்டங்களை திமுக அரசு கைவிட்டுவிட்டது. திமுக தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. அத்தேர்தலில் ஆளும் திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்’’ என்றார்.

இதனைத் தொடர்ந்து அந்தியூர் பவானி பிரிவில் ஆதரவாளர்களிடம் பேசுகையில், ‘‘மேற்கு மாவட்டங்களான திருப்பூர், கோவை, ஈரோட்டில் தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டுவிட்டன. தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு காய்கறி விலைகள் உயர்வை கட்டுப்படுத்த தவறிவிட்டது. தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை பெற்றுத் தருவதில் திமுக அரசு தாமதம் செய்யவே கூடாது’’ என்றார்.

பின்னர் திருப்பூர் சென்ற சசிகலா அங்கு தங்கி ஓய்வெடுத்தார். இன்று 2-வது நாளாக திருப்பூரில் மாலை 4 மணி முதல் ஆதரவாளர்களை சந்தித்து பேசுகிறார்.

சசிகலாவின் திடீர் சுற்றுப் பயணம், ஓ.பன்னீரில் அடுத்தடுத்த பொதுக்கூட்டம், அ.ம.மு.க.வின் அரசியல் பயணம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு அரசியல் விமர்சகர்களிடம் பேசினோம்.

‘‘சார், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. அணியில் ஓ.பி.எஸ். போட்டியிட்டார். அ.ம.மு.க. மட்டும் தனித்துப் போட்டியிட்டது. சசிகலாவைப் பொறுத்த வகையில் யாருக்கும் ஆதரவில்லை என்று சொல்லிவிட்டார்.

வருகிற நாடாளுமன்றத் தேர்தல் மத்தியில் ஆளும் பா.ஜ.க.விற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சமீபத்தில் பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகள் சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ‘உடைக்கப்பட்ட’ கட்சித் தலைவர்கள்தான் கலந்து கொண்டார்கள். தவிர, தமிழகத்தில் இருந்து மாபெரும் இயக்கமான அ.தி.மு.க., த.மா.கா. உள்பட சில கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் சார்பில் பெங்களூருவில் நடந்த இரண்டாவது பொதுக்கூட்டத்தில் வலுமையான கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். ஏன், சில மாநிலங்களில் ஆளும் முதல்வர்களே கலந்து கொண்டனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் முக்கியத்துவம் கொடுத்தது வரவேற்கத்தக்கது.

அதே சமயம், அ.தி.மு.க. கொங்கு மண்டலத்தில் வலுவாக இருக்கிறது. வட மாவட்டங்களில் வலுவாக இருக்கிறது. ஆனால், முக்குலத்தோர் அதிகம் வசிக்கும் தென் மாவட்டங்களில்தான் எடப்பாடிக்கு செல்வாக்கு இருக்குமா? என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஏனென்றால், ஓ.பி.எஸ்.ஸுக்கும் சுத்தமாக ஆதரவு இல்லை என்று சொல்லிவிட முடியாது.

இதற்கிடையே, எடப்பாடிக்கு ஆதரவு மண்டலமான கொங்குமண்டலத்தில் எடப்பாடிக்கு எதிராக கர்ஜித்து சதுரங்க வேட்டையில் இறங்கியிருக்கிறார் சசிகலா! எனவே, பி.ஜே.பி.யின் வியூம், எடப்பாடியின் நம்பிக்கை, சசிகலாவின் சதுரங்க வேட்டை… என வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. எந்தளவிற்கு வெற்றியைக் கொடுக்கும் என்பதை யூகிக்க முடியாத நிலைதான் உள்ளது. அதே சமயம், தி.மு.க. மீது அதிருப்தி இருந்தாலும், அ.தி.மு.க.வின் விரிசல், அக்கட்சிக்கு பலத்தைக் கொடுக்கும்’’ என்றனர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal