தேசிய அளவிலான வக்பு வாரிய தலைவர்கள், தலைமைச் செயல் அதிகாரிகள் சங்கமிக்கும் மாநாடு கடந்த 20-ம் தேதி மாலை புதுடில்லி ஸ்கோப் மாநாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சரும், வக்பு கவுன்சிலிங் தலைவருமான ஸ்மிருதி ராணி தலைமையேற்று உரையாற்றி, மாநில வாரியாக அனைத்து வக்பு வாரிய தலைவர்களிடமும் கலந்துரையாடினார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் வக்பு வாரிய நிர்வாகம் சந்திக்கும் பிரச்சினைகள், சவால்கள் குறித்து விரிவாகப் பேசப்பட்டன. குறிப்பாக ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துக்கள், தனியாரால் உரிமை கொண்டாடப்படும் வக்பு சொத்துக்கள், நீதிமன்ற வழக்குகளில் சிக்கித் தவிக்கும் அவலநிலை போன்றவை மிக முக்கியமாக பேசப்பட்டன.

இந்த மாநாட்டில் தமிழக வக்பு வாரிய தலைவர் அப்துல்ரகுமான் கலந்து கொண்டு மத்திய அரசையும் மாநாடு நிகழ்ந்த விதம், மத்திய அரசு ஆற்றும் பணிகள் ஒத்துழைப்பு குறித்து பாராட்டி பேசினார்.

மேலும், இதனை தனது முகநூல் பதிவிலும் மத்திய அரசை பாராட்டி எழுதியிருந்தது சர்ச்சையை கிளப்பியது. இதில், மாநில அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என்கிற ரீதியில் எழுதியிருந்ததை முஸ்லிம் லீக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்க சத்தம் இல்லாமல் தனது பதிவை அப்துல் ரகுமான் நீக்கி விட்டதாக கூறப்படுகின்றது.

திமுக கூட்டணியில் இருந்து கொண்டு மத்திய அரசை பாராட்டியும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியை பாராட்டியும் இணைந்து எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்ட அப்துல் ரகுமான் தன் மீது உள்ள மத்திய அமலாக்கத்துறை வழக்குகளில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவே சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்ததாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் அந்தப்பதிவுகளை அடியோடு நீக்கி விட்டது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal